'விஜயகாந்த் புகைப்படத்தை எந்த கட்சியும் பயன்படுத்த கூடாது': தே.மு.தி.க., பிரேமலதா எச்சரிக்கை
'விஜயகாந்த் புகைப்படத்தை எந்த கட்சியும் பயன்படுத்த கூடாது': தே.மு.தி.க., பிரேமலதா எச்சரிக்கை
ADDED : ஆக 07, 2025 06:02 AM

வேலுார்: ''விஜயகாந்த் படத்தையோ, திரைப்பட வசனங்களையோ எந்த அரசியல் கட்சிகளும் பயன் படுத்தக் கூடாது,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார்.
வேலுார் மாநகர, தே.மு.தி.க., பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. இதில், பொதுச்செயலர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ் ஆகியோர் பங்கேற்று சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர், பிரேமலதா கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம்- -ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. ஆணவ படுகொலைகள், லாக்--அப் படுகொலைகள், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. கொள்ளை, கொலை நடப்பதை தடுப்பதற்கு, போலீஸ் துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வருவதை, தே.மு.தி.க., வரவேற்கிறது. தி.மு.க., அரசுக்கான என்னுடைய மார்க் 100க்கு, 50 தான்.
ஆளும் கட்சியை எதிர்த்து குரல் கொடுப்பது, குறை சொல்வது தான், எதிர்க்கட்சி. அந்த பணியை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி செய்கிறார்.
எல்லா கட்சிக்கும் அதிகாரத்துக்கு வரும் ஆசை உண்டு. தே.மு.தி.க., ஒரு அரசியல் கட்சி; எங்கள் தலைவர் விஜயகாந்த்.
எனவே, எந்த கட்சியும், விஜயகாந்த் படத்தை என்றைக்கும் பயன்படுத்தக்கூடாது. தே.மு.தி.க.,வுடன் கூட்டணியில் வரும் கட்சிகள், தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் படத்தை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.