ADDED : ஜன 17, 2025 08:33 PM
சென்னை:'ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை' என, தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலர் ஆனந்த் அறிக்கை:
த.வெ.க., தலைவர் தனது முதல் அறிக்கையிலேயே, '2026ல் நடக்க உள்ள, சட்டசபை பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவதுதான், தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு. அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடக்கும், உள்ளாட்சி தேர்தல் உட்பட, எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை' என தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் ஆளும் அரசுகள், ஜனநாயக மரபுகளை பின்பற்றாமல், தங்களின் அதிகார பலத்துடன், பொதுத் தேர்தல்களை காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராக பல மடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே, கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
அதன் அடிப்படையில், நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே, பிப்., 5ல் நடக்க உள்ள, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையும், தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிக்கிறது. அத்துடன் எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.