மாணவர்களுக்கு "அமெரிக்க விசா' இலக்கு நிர்ணயிக்கவில்லை : விசா அதிகாரிகள் தகவல்
மாணவர்களுக்கு "அமெரிக்க விசா' இலக்கு நிர்ணயிக்கவில்லை : விசா அதிகாரிகள் தகவல்
ADDED : ஜூலை 30, 2011 04:08 AM

மதுரை : ''மாணவர்களுக்கு 'அமெரிக்க விசா' வழங்குவதில், இலக்கோ, கட்டுப்பாடோ நிர்ணயிக்கவில்லை,'' என, அமெரிக்க தூதரக, சென்னை விசா அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுரை பாத்திமா கல்லூரியில் நடந்த 'விசா' விழிப்புணர்வு முகாமில், அமெரிக்க தூதரக அதிகாரிகள், காத்தி ரீடி, சாரா கிளைமர் கூறியதாவது: இந்திய மாணவர்கள், அமெரிக்காவில் படிக்க விரும்பினால், முதலில் சரியான பல்கலைக் கழகத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த படிப்பு படிக்க விரும்புகிறார், அதற்கு ஆகும் செலவு, அமெரிக்காவில் தங்குவதற்கான செலவுகளை திட்டமிட வேண்டும். இதற்கான போதிய நிதி ஆதாரம் இருந்தால், விசா பெற விண்ணப்பிக்கலாம். விசா கட்டணம் செலுத்திய பின், சென்னை தூதரக அலுவலகத்தில், நேர்முகத் தேர்வு நடைபெறும்.
தேர்வுக்கு, 15 நிமிடங்களுக்கு முன், அங்கிருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக, மூன்று நிமிடங்கள் தான் ஒதுக்கப்படும். கேள்வி நேரத்தின் போது, உண்மையானத் தகவல்களையும், சான்றிதழ்களையும் தரவேண்டும். பொய்யானச் சான்றிதழை சமர்ப்பித்தால், நிரந்தரமாக அமெரிக்கா செல்வதற்கு தடை விதிக்கப்படும். சேர்க்கைக்கு, ஒன்று முதல் மூன்று மாதங்கள் முன், விசாவுக்கு விண்ணப்பிப்பது நல்லது.
குறுகிய கால வணிகத் தொடர்புக்கு, பி1 விசா, சுற்றுலாச் செல்ல, பி2 விசா பெறலாம். இந்தியர்கள் அமெரிக்காவில், சட்டரீதியாக பணி செய்வதற்கு எச்1பி, எல்1ஏ, எல்1பி விசாக்கள் தரப்படுகின்றன. எச்1பி விசா திறமையான தொழில் வல்லுனர்களுக்கும், எல்1ஏ அதிகாரிகள், செயலர்கள் போன்ற உயர்பணிகளுக்கும், எல்1பி குறிப்பிட்ட தொழிலில் சிறப்பு வல்லுனர்களுக்கும் தரப்படுகிறது.
குடியுரிமைப் பெறாத விசாவின் மூலம், 10 சதவீத இந்தியர்கள் அமெரிக்கா வருகின்றனர். உலகளவில், 65 சதவீத இந்தியர், எச்1பி விசா பெறுகின்றனர். ஒரு லட்சத்து, 42 ஆயிரத்து, 565 குடியுரிமைச் சாரா விசாக்கள், 2010ல் வழங்கப்பட்டுள்ளன. ஒரு லட்சத்து மூவாயிரம், இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயில்கின்றனர். மாணவர்களுக்கு விசா வழங்குவதில், எந்த இலக்கும் நிர்ணயிக்கவில்லை. தகுதியான மாணவர்களுக்கு, விசா தொடர்ந்து வழங்கப்படுகின்றன, என்றனர். விசா உதவியாளர் வித்யாலட்சுமி, வணிக சிறப்பு அலுவலர் மணிமாலா பங்கேற்றனர்.