டோல்கேட்டில் 'யு டர்ன்' வசதி இல்லாததால் மதகடிப்பட்டில் வாகன ஓட்டிகள் தவிப்பு
டோல்கேட்டில் 'யு டர்ன்' வசதி இல்லாததால் மதகடிப்பட்டில் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : ஜன 04, 2024 02:58 AM

விழுப்புரம்: கெங்கராம்பாளையம் டோல்கேட் பகுதியில் 'யு டர்ன்' வசதியில்லாததால், மதகடிப்பட்டில் வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் சாலையை கடப்பது தொடர்கிறது.
விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை திட்டப் பணியில், வளவனுார் மற்றும் மதகடிப்பட்டு இடையே கெங்கராம்பாளையம் பகுதியில் புதிதாக டோல்கேட் அமைக்கப்பட்டு வருகிறது. இதனருகே, மதகடிப்பட்டு பகுதியில் மேம்பாலம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
மதகடிப்பட்டு பகுதியில், இடதுபுறம் மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லுாரி மற்றும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதனால், அங்கிருந்து மெயின் ரோட்டிற்கு வரும் வாகனங்கள் எதிர்புற சாலைக்கு செல்வதற்கு வழியில்லை. அதனால், பலர் விதிகளை மீறி வலதுபுறம் திரும்பி டோல்கேட் வரை சென்று திரும்பி வருகின்றனர்.
டோல்கேட் பகுதியிலும் 'யு டர்ன்' வசதி இல்லாததால், டோல்கேட்டை கடந்து, அருகே உள்ள செக்போஸ்ட் வரை நீண்ட துாரம் சென்று வாகன ஓட்டிகள் திரும்பி வருகின்றனர். இதனால், சிலர் ஆபத்தான முறையில் வழியிலேயே சாலையை கடப்பது தொடர்கிறது.
மேலும், புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து மேம்பாலம் வழியாக விழுப்புரம் நோக்கி வரும் வாகனங்களும், டோல்கேட் பகுதிக்கு முன் திரும்பி செல்வதற்கு வழியில்லை. அங்கும் 'யு டர்ன்' வசதி இல்லாததால், அவர்களும் டோல்கேட்டை கடந்து செக்போஸ்ட் வரை சென்று வர வேண்டியுள்ளது.
புதுச்சேரி எல்லை பகுதியில் உள்ள இந்த குளறுபடியான நிலையை அதிகாரிகள் ஆய்வு செய்து, டோல்கேட்டின் இருபுறமும் 'யு டர்ன்' வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.