மூணாறில் மீண்டும் உறைபனி இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மூணாறில் மீண்டும் உறைபனி இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : டிச 21, 2025 03:30 AM

மூணாறு: மூணாறில் நேற்று பல பகுதிகளில் வெப்பநிலை 'ஜீரோ' டிகிரி செல்சியஸ் பதிவாகி உறைபனி ஏற்பட்டதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மூணாறில் ஆண்டு தோறும் நவம்பரில் குளிர் காலம் துவங்கும். டிசம்பரில் வெப்பநிலை வெகுவாக குறைந்து உறைபனி ஏற்படும். கடந்தாண்டு டிச.,24ல் உறைபனி ஏற்பட்டது. இந்தாண்டு வழக்கத்தை விட முன் கூட்டியே டிச.,15ல் ஒரு சில பகுதிகளில் உறைபனி ஏற்பட்டது. நேற்று காலை பல பகுதிகளில் வெப்பநிலை ' ஜீரோ' டிகிரி செல்சியசாக குறைந்து ஆறு நாட்கள் இடைவெளியில் மீண்டும் உறைபனி ஏற்பட்டது.
குறிப்பாக மூணாறு, செண்டுவாரை, சைலன்ட்வாலி, லெட்சுமி, கன்னிமலை எஸ்டேட் பகுதிகளில் 'ஜீரோ' டிகிரி, சிவன்மலை எஸ்டேட்டில் மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அப்பகுதிகளில் உறைபனி ஏற்பட்டு கடுங்குளிர் நிலவியது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
உறைபனியுடன் கடுங்குளிர் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். உறைபனியை பல பகுதிகளில் பயணிகள் பார்த்து ரசித்தனர்.

