அக். 16 - 18 க்குள் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு
அக். 16 - 18 க்குள் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு
ADDED : அக் 10, 2025 05:19 PM

சென்னை: அக்.,16 முதல் 18 ஆம் தேதிக்குள் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் நிருபர்களை சந்தித்த வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா நிருபர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை அக். 16 - 18 க்குள் விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை, தமிழகத்தில் பெய்ய வேண்டிய இயல்பான அளவு 33 செ.மீ., அதை ஒட்டி மழை பெய்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 45 செ.மீ., கிடைத்த மழை அளவு 58 செ.மீ., இது இயல்பை விட 29 சதவீதம் அதிகம்.
வளிமண்டல கீழடுக்குகளில் இப்போது மேற்கு திசை காற்று வீசுகிறது. அது மேற்கு திசை காற்று கிழக்கு வடகிழக்கு திசை காற்றாக வீசும்போது தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்.,16- 18 ல் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அமைந்துள்ளன. வழக்கமாக, அக்., 1 முதல் - டிச., 31 வரை தான் வடகிழக்கு பருவமழை காலம். கடந்த 15 ஆண்டுகளில் அனைத்து ஆண்டுகளிலும் அக்., மாதத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. அநேக வருடங்களில் இயல்பை விட அதிகமாக மழை இருந்துள்ளது. 2 ஆண்டுகளில் மட்டும் இயல்பை விட குறைவாக உள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் இயல்பாகவும், இயல்பை விட அதிகமாகவும் வடகிழக்கு பருவமழை பதிவாக வாய்ப்பு உள்ளது. தென் மாவட்டங்களில் இயல்பாகவும், இயல்பை விட குறைவாகவும் வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் காலகட்டத்தில் 92 நாட்களில் இயல்பாக 44 செ.மீ., மழை பதிவாவது வழக்கம். இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 50 செ.மீ., வரை மழை பதிவாக வாய்ப்பு உள்ளது. அக்., 1 முதல் தற்போது வரை தமிழகத்தில் 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்த மாதம் 17 செ.மீ., மழை கிடைக்க வேண்டும்.
கனமழை எச்சரிக்கை
இன்றைக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2 வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஒன்று, வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் பகுதியிலும், மற்றொன்று வடக்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் 15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் நிறைய காற்றழுத்த தாழ்வு மண்டலமோ, புயல் சின்னமோ உருவாக வாய்ப்பு அதிகம். இந்தக் காலத்தில் உருவாக வாய்ப்பு உள்ளது. தற்போதே எந்த இடத்தில் எத்தனை புயல் உருவாகும் என சொல்வது சவாலானது.
ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ., மழைப்பொழிவு இருந்தால் அது மேகவெடிப்பு என்பதாகும். அது எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் நடக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.