வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரம்: 29 இடங்களில் அதிகனமழை
வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரம்: 29 இடங்களில் அதிகனமழை
ADDED : டிச 13, 2024 04:38 PM

சென்னை: வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளதாகவும், 29 இடங்களில் அதிகனமழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் நிருபர்களை சந்தித்த வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், பதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்துள்ளது.
29 இடங்களில் அதி கனமழையும், 81 இடங்களில் மிக கனமழையும், 168 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 54 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும், வட மாவட்டங்களில் அனேக இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டெல்டா மாவட்டங்கள்
கன்னியாகுமரி
தூத்துக்குடி
தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்
நெல்லையில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும்
உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். அதனைத் தொடர்ந்து வரும் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக 17, 18 தேதிகளில்,
டெல்டா மாவட்டங்கள்
தமிழக கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
குமரிக்கடல் பகுதிக்கு இன்றும், அந்தமான் கடற்பகுதி, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு 15,16,17 தேதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம்.
வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை
அக்., 1 முதல் இன்று வரை பதிவான மழை அளவு 54 செ.மீ.,
பதிவாக வேண்டிய இயல்பான அளவு 40 செ.மீ.,
நேற்று வரை 16 சதவீதம் அதிகம் பதிவாகி இருந்தது. தமிழகத்தில் ஒரே நாளில் 16 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.
5 மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும்
22 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும்
13 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.