10 பவுன் நகை பறித்து தப்பிய வடமாநில கொள்ளையர் சிக்கினர்
10 பவுன் நகை பறித்து தப்பிய வடமாநில கொள்ளையர் சிக்கினர்
ADDED : அக் 02, 2025 07:52 AM

கோவை; கோவையில், நகை பட்டறை ஊழியரிடம், 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற, வடமாநில கும்பலை சேர்ந்த மூவரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கோவை, வெரைட்டி ஹால் ரோட்டில், தங்க நகை பட்டறை நடத்தி வருபவர் சஞ்சய். இங்கு வேலைபார்க்கும் ஊழியரான, மேற்குவங்கத்தை சேர்ந்த சுபோமங்ஷி, செப்., 12ல், தங்க நகையை மற்றொரு கடைக்கு எடுத்து சென்றார்.
நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, முகத்தில் மயக்க நீரை தெளித்தனர். மயக்கம் அடைந்ததும், 10 பவுன் தங்க நகையை பறித்து தப்பினர்.புகாரின்படி, வி.எச்.ரோடு போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர். கொள்ளையர்கள், மஹாராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட காரில் தப்பியதும், அவர்கள் நாக்பூரை சேர்ந்த கொள்ளை கும்பல் என்பது தெரிந்தது.
பிடிக்க ஏழு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. நாக்பூர் சென்று, கொள்ளையர்கள் இருக்கும் இடத்தை ஒரு வாரமாக கண்காணித்து வந்தனர். அங்குள்ள வீட்டில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.இதில், நாக்பூர், யார்கடாவை சேர்ந்த யாஷிம் அலி, 57, முகமது பரீத், 25, குர்பானிக், 27, ஆகியோரை கைது செய்தனர். கொள்ளை கும்பல் தலைவன் சலீம் அலியை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவரையும் கோவை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.