ADDED : டிச 24, 2024 06:17 AM
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிக்கை:
தமிழகத்தில் அனைத்து பள்ளி குழந்தைகளும் தொடர்ந்து தடையின்றி கல்வி பயில்வதற்கு ஏதுவாக, எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கல்வி உரிமை சட்டத்தின் விதிகளை திருத்தம் செய்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகளில், தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு, இரண்டு மாதங்களில் மறுதேர்வு முறையையும் அதிலும் தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு, அதே வகுப்பில் ஓராண்டு படிக்க வேண்டும் என்ற முறையையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
தேசிய கல்வி கொள்கையை பின்பற்றி நடத்தப்படும் மத்திய அரசு பள்ளிகளுக்கு, இந்த புதிய நடைமுறை பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், தடையின்றி எட்டாம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது. இது, உண்மையில் வருத்தம் அளிக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கல்வி கொள்கையை பின்பற்றாமல், மாநிலத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு, புதிய மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதற்கான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. தமிழகத்தில் மாநில கல்வி கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள், தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளிகளை தவிர, பிற பள்ளிகளுக்கு பொருந்தாது.
மத்திய அரசின் கல்வி உரிமை சட்ட விதிகள் குறித்து, எந்த வகையிலும் குழப்பம் அடைய தேவைஇல்லை.
இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.