மிகவும் சிக்கலான விஷயம்; கேரள நர்ஸ் மரண தண்டனையை நிறுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதில்
மிகவும் சிக்கலான விஷயம்; கேரள நர்ஸ் மரண தண்டனையை நிறுத்த கோரிய வழக்கில் மத்திய அரசு பதில்
UPDATED : ஜூலை 14, 2025 02:23 PM
ADDED : ஜூலை 14, 2025 02:12 PM

புதுடில்லி: ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது, ''மிகவும் சிக்கலான விஷயம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டோம்'' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நர்ஸ் நிமிஷா பிரியா, 38. இவர் மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். அங்கு தன்னுடன் பங்குதாரராக இருந்த ஏமன் நாட்டவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு அந்நாட்டு கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. அவருக்கு வரும் 16ல் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், அதனை தடுத்து நிறுத்தக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 14) சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி கூறியதாவது: மத்திய அரசு செல்லக் கூடிய ஒரு கட்டம் உள்ளது. நாங்கள் அதை அடைந்துவிட்டோம்.
ஏமன் உடன் உலகின் வேறு எந்த நாட்டையும் போல இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இருப்பினும் அதிகபட்ச முயற்சிகள் நடந்து வருகிறது. மிகவும் சிக்கலான விஷயம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டோம். அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது. அந்த நாடு ராஜதந்திர ரீதியாக அங்கீகரிக்கப்பட வில்லை. ஏமன் உலகின் வேறு எந்த நாடு போல கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நீதிபதிகள் கூறியதாவது: ''ஒரு வெளிநாட்டிற்கு எதிராக எப்படி உத்தரவை நாம் எப்படி பிறப்பிக்க முடியும்? யார் பின்பற்றப் போகிறார்கள்? என தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.