குடியிருப்போர் சங்கங்களுக்கு நிதி 4 ஆண்டாக அமலுக்கு வராத அறிவிப்பு
குடியிருப்போர் சங்கங்களுக்கு நிதி 4 ஆண்டாக அமலுக்கு வராத அறிவிப்பு
ADDED : நவ 04, 2024 03:39 AM
சென்னை: வீட்டு வசதி வாரிய திட்டங்களில் உருவாக்கப்படும், குடியிருப்போர் சங்கங்களின் அடிப்படை செலவுகளுக்காக, 'கார்பஸ் பண்ட்' எனப்படும், வைப்பு நிதி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஆண்டுகள் பல கடந்தும் செயல்பாட்டிற்கு வரவில்லை.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், வீட்டுவசதி வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்ட பகுதிகளில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகள் விற்பனையான நிலையில், அங்கு குடியிருப்போர் சங்கத்தை ஏற்படுத்தி, பராமரிப்பு பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டம், அடுக்குமாடி குடியிருப்பு உரிமைகள் சட்டம் போன்றவை இதை வலியுறுத்துகின்றன.
ஆனால், வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், பொறுப்புகளை ஒப்படைப்பதில், அதிகபட்ச தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
சங்கம் அமைத்து பொறுப்புகளை ஒப்படைத்து விட்டால், ஒதுக்கீட்டாளர்கள் அத்திட்டத்தில் காணப்படும் குறைபாடு தொடர்பாக வழக்கு தொடர வாய்ப்புள்ளது என்பதால், பொறுப்புகளை ஒப்படைக்க அதிகாரிகள் அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வாரிய திட்டங்களில் உருவாகும் குடியிருப்போர் சங்கங்களை ஆதரிப்பதற்கான அறிவிப்புகள், சட்டசபையில், 2021ல் வெளியிடப்பட்டன. அதன்படி, புதிதாக சங்கம் ஏற்படுத்த தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி வழங்கப்படும்.
அதற்காக, வீடு விற்பனையில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியில், 'கார்பஸ் பண்ட்' எனப்படும், மூலதன வைப்பு நிதி உருவாக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியாகி, மூன்று ஆண்டுகள் கடந்தும், இன்னும் அமலுக்கு வரவில்லை.
இதுகுறித்து, வாரிய ஒதுக்கீட்டாளர்கள் கூறியதாவது:
புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில், அனைத்து வீடுகளும் பயன்பாட்டுக்கு வரும் போது தான், சில குறைபாடுகள் தெரிய வருகின்றன.
அதை சரி செய்ய, வீடு வாங்கியவர்களால் செலவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இப்பிரச்னையை தீர்க்கும் வகையில் தான், குடியிருப்போர் சங்கங்களுக்கு நிதி வழங்கும் திட்டத்தை வாரியம் அறிவித்தது.
ஆனால், சுயநிதி முறையில் கட்டப்பட்ட திட்டங்களுக்கு இது பொருந்தாது என, அதிகாரிகள் குழப்புகின்றனர். தற்போது, வாரியம் நேரடியாக, தங்கள் நிதியில் குடியிருப்புகள் கட்டுவதை குறைத்து விட்டது.
இருந்தும், சுயநிதி திட்டத்திற்கு போதிய அளவுக்கு மக்கள் ஆதரவு இல்லாததால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகள் வாரிய நிதியில் தான் கட்டப்படுகின்றன. எனவே, இத்திட்டங்களில் உருவாகும் சங்கங்களுக்கு, வாரியம் நிதி ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.