மக்கள் தொகை கணக்கெடுக்கும் ஆசிரியர்களுக்கு 'நோட்டீஸ்'
மக்கள் தொகை கணக்கெடுக்கும் ஆசிரியர்களுக்கு 'நோட்டீஸ்'
ADDED : ஆக 19, 2026 04:31 AM
மதுரை: தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கும் நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமாக வீடுகள் கணக்கெடுக்கும் பணி ஆக., 1ல் துவங்கி 31 வரை நடக்கிறது.
இதில் கணக்கெடுப்பாளர், மேற்பார்வையாளர் என 1.30 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஆசிரியருக்கு 200 வீடுகள் ஒதுக்க அறிவுறுத்தப்பட்டாலும் 300 முதல் 800 வீடு ஒதுக்கப்பட்டதாக புகார் உள்ளது. சிலருக்கு வீடு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பூர் உட்பட சில மாவட்டங்களில் தற்போது வரை 60 சதவீதம் பணியை நிறைவு செய்யாத மேற்பார்வையாளருக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு பொறுப்பு அலுவலர்கள் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர்.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: மதுரையிலும் நோட்டீஸ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. தனியாக கணக்கெடுக்க செல்லும் ஆசிரியைக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களை நாய் துரத்துவது, போதை நபர்கள் தாக்குவது போன்ற சம்பவங்களும் நடக்கின்றன.
மதுரை உட்பட மாநகராட்சிகளில் பில் கலெக்டர்களை உதவிக்கு அழைக்கலாம் என உத்தரவிடப்பட்டது.
அவர்கள் களத்திற்கு வரவில்லை. வீட்டில் எவ்வகை தரைத்தளம், கார் உள்ளதா, என்ன ஜாதி போன்ற கேள்விக்கு சிலர் பதில் சொல்ல மறுக்கின்றனர்.
பெண்கள் அலைபேசி எண்ணை தெரிவிக்க தயங்குகின்றனர்.
ஆசிரியர்கள் பல சிரமங்களை சந்திக்கும்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிப்பது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது என்றனர்.
