ADDED : செப் 17, 2026 11:03 PM
சென்னை: ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கு தொடர்பாக, தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதுாறு கருத்துக்கள் கூறியதாக, ஐ.பி.எஸ்., அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக, 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி, கடந்த 2014ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய, வழக்கறிஞர் கமிஷனரை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தோனியின் வாக்குமூலத்தை, 'வீடியோ' பதிவு செய்யக்கோரி, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி சம்பத் குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், 'வாக்குமூலப் பதிவை கண்காணிக்க, நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும்; வீடியோ பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை 'எடிட்' செய்யாமல், எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும்.
'வாக்குமூலப் பதிவை, ஐந்து நட்சத்திர விடுதி அல்லது தனியார் பங்களாக்களில் நடத்தாமல், நீதிமன்றம் அல்லது அரசு கட்டடங்களில் நடத்த உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு அக்., 9ம் தேதிக்குள் மகேந்திர சிங் தோனி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தள்ளி வைத்தார்.
