அமோனியா கசிவு விவகாரம்: மாசு வாரியத்துக்கு நோட்டீஸ்
அமோனியா கசிவு விவகாரம்: மாசு வாரியத்துக்கு நோட்டீஸ்
ADDED : ஜூலை 19, 2026 10:57 PM
சென்னை:திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியில், தனியார் இறால் பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில், ஜூன், 21ல் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
இதில், 60க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டதில், 18 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.
தீர்ப்பாய தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா, வல்லுனர் குழு உறுப்பினர் அப்ராஸ் அகமது ஆகியோர் முன்னிலையில், இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
குறிப்பிட்ட இறால் பதப்படுத்தும் ஆலையில், காற்று மாசு கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் சுற்றுச்சூழல் சட்ட விதிகள் மீறப்பட்டது, முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. தொழிற்சாலை பாதுகாப்பு விதிகள் மீறப் பட்டுள்ளன.
அவசர காலத்தில் அபாய ஒலி எழுப்பும் கருவிகள் வேலை செய்யவில்லை. தீத்தடுப்பு விதிகள் மீறப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் சட்ட விதிமீறல் ரீதியில், இந்த சம்பவத்தை விசாரிக்க வேண்டியது அவசியம்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய - மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர், வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சென்னை மண்டல அலுவலகம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆகியோர், அடுத்த விசாரணை தேதிக்கு ஒரு வாரம் முன்னதாக பதில் அளிக்க வேண்டும்.
பதில் மனுக்களை, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் ஆக.,31ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
