ADDED : பிப் 08, 2025 12:23 AM
'பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி துாக்கி வீசப்பட்ட சம்பவம் குறித்து, மூன்று நாட்களுக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவாலுக்கு, தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.
கடிதம் வருமாறு:
வேலுார் மாவட்டத்தில், ஓடும் ரயிலில் மகளிருக்கான பெட்டியில் பயணம் செய்த கர்ப்பிணியை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, அவரை துாக்கி வீசிய சம்பவத்திற்கு, தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவிக்கிறது.
இதுபோன்ற சம்பவங்களால், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கவலை அளிக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பி.என்.எஸ்., சட்ட விதிகளை பயன்படுத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையான எப்.ஐ.ஆர்., மற்றும் விரிவான அறிக்கையை, மூன்று நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.