ADDED : அக் 09, 2025 12:39 AM

திருப்பூர்: தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் மட்டும் செல்லுபடியாகும் அடையாள அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது; மருத்துவ பரிசோதனை செய்து, நேரடியாக மத்திய அரசின், யு.டி.ஐ.டி., கார்டுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் பயன்படுத்தும் வகையிலான அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்தது. மாதாந்திர உதவித்தொகை, இலவச ஸ்கூட்டர் உட்பட மாநில அரசின் சலுகைகளை பெறுவதற்கு, இது பயன்பட்டது.
ரயில் பயணக் கட்டண சலுகை உட்பட நாடு முழுதுமான பயன்பாட்டுக்கு, மத்திய அரசின் யு.டி.ஐ.டி., எனப்படும் தனித்துவ அடையாள அட்டையைப் பெறவேண்டியது அவசியமாகிறது.
இது குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் அடையாள அட்டை வழங்குவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
பரிசோதனைக்குப்பின் மருத்துவர் வழங்கும் சான்று, ஆதார் உள்ளிட்ட விபரங்களை இணைத்து, மாற்றுத்திறனாளிகள், யு.டி.ஐ.டி., இணையதளத்தில் நேரடியாகவோ அல்லது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் வாயிலாகவோ, மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவேண்டும். இந்த ஒரே அடையாள அட்டை வாயிலாகவே, மத்திய, மாநில அரசு நலத்திட்டங்கள் அனைத்தையும் மாற்றுத்திறனாளிகள் பெறமுடியும்.
மத்திய அரசின் யு.டி.ஐ.டி., ஸ்மார்ட் கார்டு போன்றது. அதில் கியூ.ஆர்., குறியீடு இடம்பெற்றிருக்கும்.
ஒரே நபர் இரண்டு வெவ்வேறு கார்டு பெறமுடியாது. கார்டை தொலைத்தாலும், ஆதார் விபரங்களை பயன்படுத்தி, சுலபமாக நகல் பெறமுடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.