கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வெற்றி செல்லாது என அறிவிப்பீர்களா? சீமான் கேள்வி
கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வெற்றி செல்லாது என அறிவிப்பீர்களா? சீமான் கேள்வி
ADDED : நவ 23, 2025 05:47 PM

புதுச்சேரி: ''கொளத்தூர் தொகுதியில் போலி ஓட்டுகள் போட்டதாக மத்திய நிதியமைச்சர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் வெற்றி செல்லாது என்று அறிவிப்பீர்களா,'' என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; பிப்ரவரி 7ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்துகிறோம். அதில், புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். மாஹி, ஏனாம் தொகுதியில் போட்டியிட மாட்டோம்.
புதுச்சேரியில் மது அங்கீகரிக்கப்பட்ட மாநிலமாக மாறிவிட்டது. தமிழகமே மதுவை நம்பி தான் ஆட்சி நடத்துகிறார்கள். எந்த வடிவத்தில் வந்தாலும், எப்படி வந்தாலும் மது வந்து ஒரு விஷம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மதுவை விற்று வரும் வருவாயில் நலத்திட்டம் என்பது பைத்தியகாரத்தனம். விஷத்தை கொடுத்து விட்டு உனக்கு நல்லது செய்கிறேன் என்பது என்ன மாதிரியான செயல். அந்த மாதிரி தான் இது. அதைப் பேசி பயனில்லை.
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த உடனே, மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னோம். அது மாதிரி தான் புதுச்சேரியில் ஆட்சிக்கு வந்த உடன் இதை செய்வோம். யூனியன் பிரதேசமான புதுச்சேரி சுற்றுலாத் தலம் என்பதால், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வருவார்கள். எனவே மொத்தமாக மூட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக மூடுவோம்.
காவிரியிலேயே நமக்கு எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பது தெரிகிறது. உரிய நதிநீரைப் பெற முடியவில்லை. மேகதாதுவில் அணை கட்டினால் நமக்கு சுத்தமாக தண்ணீரே கிடைக்காது.
அணை கட்டுவது அவர்களின் உரிமை என்கிறார்கள். அவரவர் நிலத்தில் உள்ள வளங்கள் அவரவருக்கே என்று வந்தால், எப்படி நாடு ஒருமைப்பாடு உள்ள நாடாக இருக்கும். என்னுடைய நரிமணம் பெட்ரோலை நீங்க எடுத்துக்கிறீங்க. நெய்வேலி பழுப்பு நிலக்கரி என்னுடைய வளம். அந்த வளத்தில் இருந்து எடுக்கப்படும் மின்சாரத்தை நீங்க எடுத்துக்கிறீங்க.
எனக்கு முழுமையான மின்சாரம் இல்லை. அணுஉலை என்னுடைய நிலத்தில் இருக்கிறது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், சாவு, அழிவு எனக்கு. கேரளா என்றால் முல்லைப்பெரியாறு அணை நீர் எனக்கு, கர்நாடகா என்றால் காவிரி நீர் எனக்கு. மேகதாது அணை கட்டினால் தண்ணீர் மொத்தமாக நின்று விடும்.
காங்கிரஸ், பாஜ தான் அங்கு ஆளுகின்றனர். இந்த இரு கட்சிகளும் என்னை இந்தியனாக இருக்கச் சொல்கிறது. அதே கட்சிகள் கர்நாடகாவுக்கு சென்றால் மாநில கட்சியாக மாறி விடுகின்றனர். கர்நாடகா நலனுக்காக மட்டும் பேசுகின்றனர். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டாதே என்று சொல்லும் கட்சி தோற்று விடும். இங்குள்ள பாஜ, காங்கிரஸ் பேசுமா?
மேகதாது அணை கட்டும் காங்கிரசின் வெற்றிக்காக ஓட்டு கேட்ட முதல்வர் ஸ்டாலினை தான் கேட்க வேண்டும். அணை கட்ட வேண்டும் என்று நிதி ஒதுக்கியவர்களை ஜெயிக்க வைக்க ஓட்டு கேட்டால், அணை கட்டுவார்களா, இல்லையா?
இருக்கும் சாலைகளை முறையாக போட்டு, பஸ் மற்றும் ரயில்களை இயக்கினாலே போதும். எது வளர்ச்சி, வயறு நிறைய பசியை வைத்து விமானத்தில் பறப்பது வளர்ச்சியா? அனைவரின் வீட்டில் வாகனத்தை வாங்கி ஓட்டுமளவுக்கு இருக்கிறார்கள். அதை வளர்ச்சி என்று சொல்லலாம். மெட்ரோவில் செல்வது தான் வளர்ச்சியா?
ரூ.72,000 கோடி ஒதுக்கிறீர்கள். பள்ளிக்கூடம் இடிந்து விழுகிறது. 300 குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஒரு கழிவறை தான் இருக்கிறது. எது அடிப்படை என்றே தெரியவில்லை. சாலை முழுவதும் சவக்குழியாத்தான் இருக்கிறது. சின்ன மழை பெய்தால் இடுப்பளவு தண்ணீர் நிற்கிறது.
சென்னை விமான நிலையத்தில் பறப்பதற்கே விமானம் இல்லாத போது, 5 ஆயிரம் ஏக்கரில் விமான நிலையம் ஏன் கட்டுகிறாய்? சென்னையில் காமராஜர், வஉசி துறைமுகங்களில் ஏற்கனவே 50 விழுக்காடுகள் தான் வேலை நடக்கிறது. அப்படியிருக்கையில் 6,111 ஏக்கரில் எதற்கு துறைமுகம்?
SIRஐ எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா எதிர்த்து மக்களை திரட்டி போராட்டம் நடத்துகிறார். இங்கு SIRக்கு பூத் அளவிலான அதிகாரிகளை போட்டது திமுக தானே?
கொளத்தூரில் போலி வாக்கு பதிவாகி இருக்கு என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறார். இதை நீங்க எப்போது கண்டு பிடிச்சீங்க? இன்னும் தேர்தல் 2 மாதத்தில் வரப்போகிறது, இப்போ சொல்றீங்க. வெற்றி செல்லாது என்று அறிவிக்கத் தயாரா? SIR செயல்படுத்தும் ஆட்சி யாருடையது. பாஜவுடன் கூட்டணியில் இருப்பதால் அதிமுக இதை எதிர்க்க முடியாது.
பூத் அளவிலான அதிகாரியுடன் திமுக கட்சிக்காரர்கள் எதுக்கு கூடவே போறாங்க? ஒருவேளை போகும் போது, என்னுடைய படமோ, தம்பி விஜய்யோட படமோ இருந்தால், அந்த ஓட்டுக்களை எடுத்து விடுவார்களா? வைத்து இருப்பார்களா?.
10 நாட்களில் 5 கோடி பேருக்கு SIR படிவங்களைக் கொடுக்க முடியுமென்றால், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா?
பிப்ரவரி 7ம் தேதி வாக்காளர் இறுதிப்பட்டியலை அறிவிப்பீர்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள். அதுக்குள்ள தேர்தல் தேதியும் அறிவித்து விடுவீர்கள். அப்படியென்றால், மீண்டும் என்னுடைய வாக்கை புதுப்பிக்க அவகாசம் எனக்கு இருக்குமா?.
தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எல்லாம் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு என்று நினைத்து கொண்டிருக்கிறோம். அது சுத்தப் பைத்தியகாரத்தனம். யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ, அவர்களின் விரல்களாக இயங்கும், இவ்வாறு அவர் கூறினார்.

