அதானியை ரகசியமாய் சந்தித்தது ஏன்! முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி
அதானியை ரகசியமாய் சந்தித்தது ஏன்! முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி
UPDATED : நவ 24, 2024 06:32 PM
ADDED : நவ 24, 2024 03:07 PM

சென்னை; கவுதம் அதானியை முதல்வர் ஸ்டாலின் ரகசியமாகச் சந்தித்தது ஏன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
முன்னணி தொழிலதிபர் கவுதம் அதானி மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார். அதற்காக இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரியங்களுக்கு ஏறத்தாழ 2,000 கோடி ரூபாய்க்கும் மேலாக லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டியது அம்பலமாகி உள்ளது.
இந்திய சூரிய ஒளி மின் உற்பத்திக் கழகத்திடமிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யச் சொல்லி ஆந்திரா, தமிழகம், சத்தீஸ்கர், ஒரிசா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் மின் வாரியங்களுக்குக்கு 2020-2024ம் ஆண்டு காலத்தில் 2,000 கோடி ரூபாய்வரை லஞ்சம் கொடுக்கப்பட்டு இருக்கிறது எனக் கூறி, அதானி குழுமத்தின் முறைகேட்டை ஆதாரங்களோடு வெளிப்படுத்தியிருக்கிறது அமெரிக்க அரசு.
இந்த வழக்கு நியூயார்க் கிழக்கு மாவட்டத்தின் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தொடுக்கப்பட்டு, அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 8 பேருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 2,000 கோடி ரூபாயை இந்தியாவின் பல்வேறு மாநில மின்வாரியங்களுக்கு லஞ்சமாகக் கொடுத்து பெறப்பட்ட ஒப்பந்தங்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவில் முதலீடுகளைப் பெற முயன்றபோது ஒட்டு மொத்தமாகச் சிக்கியிருக்கிறது அதானி குழுமம்.
செப்டம்பர் 21, 2021 அன்று 1000 மெகாவாட் மின்சாரத்தைப் பெற இந்திய சூரிய ஒளி மின் உற்பத்திக் கழகத்துடன் தமிழ்நாடு மின்வாரியம் ஒப்பந்தமிட்டிருக்கிறது. இதற்குப் பின்புலத்தில் அதானி குழுமம் தமிழக மின்வாரியத்துக்குக் கோடிகளைக் கொட்டி இறைத்திருக்கிறது என்பது அமெரிக்க அரசின் குற்றச்சாட்டின் மூலம் அம்பலமாகியிருக்கிறது.
2012- 2016ம் ஆண்டுக் காலக்கட்டத்தில், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசிய நிறுவனத்திடமிருந்து வாங்கி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு அதானி குழுமம் மும்மடங்கு அதிக விலைக்கு விற்று, முறைகேடு செய்து 6,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியதற்கே இன்னும் நீதி கிடைக்கவில்லை; இச்சமயத்தில், தி.மு.க.,வின் ஆட்சி நிர்வாகத்துக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்து, இந்திய சூரிய ஒளி மின் உற்பத்திக் கழகத்திடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கச் செய்திருக்கும் செய்தி வெளியாகியிருப்பது திராவிடக்கட்சிகளின் கேடுகெட்ட ஆட்சி நிர்வாகத்துக்கான சமகாலச் சாட்சிகளாகும்.
திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம் அமெரிக்கா வரை சென்று தமிழகத்தின் மானம் சந்தி சிரித்து நிற்கிறது. இருந்தும், இதுவரை முதல்வர் ஸ்டாலின் வாய் திறக்காது மவுனம் சாதிக்கிறார். அதானி குழுமம் லஞ்சம் கொடுத்து தான், தமிழ்நாடு மின்வாரியம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தமிட்டது என்பது தானே குற்றச்சாட்டு. அதுகுறித்து தி.மு.க. அரசின் நிலைப்பாடென்ன? அதானி குழுமம் நிலக்கரி இறக்குமதியில் செய்திட்ட 6,000 கோடி ரூபாய் ஊழல் மீது இன்று வரை வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க மறுப்பது தான் திராவிட மாடலா?
கடந்த ஜூலை 10ம் தேதி தமிழகம் வந்த அதானி, முதல்வர் ஸ்டாலினை ரகசியமாகச் சந்தித்துச் செல்ல வேண்டிய அவசியமென்ன? சந்திப்பையே வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு என்ன பேசி முடிக்கப்பட்டது? முதல்வர் ஸ்டாலின் கவுதம் அதானியைச் சந்திப்பதும், அதானியின் மகன் கரன் அதானி துணை முதல்வரான உதயநிதியின் பதவியேற்புக்கு வாழ்த்துச் சொல்வதும் எதன் வெளிப்பாடு? தி.மு.க., அரசுக்கும், கவுதம் அதானிக்கும் இடையே என்ன ரகசிய உறவு? இதுதான் அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கான ஆட்சியா?
இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறி உள்ளார்.