என்னையும், விஜய்யையும் பாஜ பெற்றெடுத்த போது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தாரா; சீமான் விமர்சனம்
என்னையும், விஜய்யையும் பாஜ பெற்றெடுத்த போது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தாரா; சீமான் விமர்சனம்
UPDATED : டிச 27, 2025 03:35 PM
ADDED : டிச 27, 2025 03:30 PM

சென்னை; என்னையும், விஜய்யையும் பாஜ பெற்றெடுத்த போது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து உள்ளார்.
சென்னை அருகே திருவேற்காட்டில் நாம் தமிழர் பொதுக்குழுக் கூட்டம் இன்று (டிச.27) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பெயரில் தமிழ்நாடு என்ற பெயர் சேர்த்திட வேண்டும், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், நீட் விலக்குக்கு கவர்னர் ஒப்புதல் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக சீமான் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;
நாங்கள் ஆட்சிக்கு வரும்போது உங்களின்(மக்களின்) குறைகேட்க வந்த பிள்ளைகள் நாங்கள் அல்ல. அந்த குறையை தீர்க்க வந்த பிள்ளைகள். நினைக்க பிறந்தவர்கள் அல்ல, நிரூபிக்க பிறந்த பிள்ளைகள்.
இதுதான் பிரச்னை, இதற்கு இதுதான் தீர்வு என்று களத்தில் வைத்துவிட்டு தான் தேர்தலை சந்திக்கிறோம். நீங்கள் நாட்டை ஆண்டவர்கள், எதிர்க்கட்சியாக இருந்தவர்கள். இப்போது தொகுதி, தொகுதியாக போய் பிரச்னைகளை தீர்ப்பதாக கூறி அறிக்கை விட்டு வருகிறீர்கள். இப்போது இந்த அறிக்கைகளை தீ வைத்து கொளுத்தாமல் என்ன பண்ண முடியும்?
மக்களின் பிரச்னை என்ன என்று தெரியாமல் ஏன் நீ அதிகாரத்தில் இருக்கிறாய்? இதெல்லாம் ஒரு சடங்கு. எங்களின் இலக்கு 234 தொகுதிகள். அறம் சார்ந்த ஆட்சிமுறையை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறோம். எப்படி பார்த்தாலும் இலவச திட்டங்கள் என்பது வளர்ச்சி அல்ல.
இலவசம் என்பது எது எதற்கு இருக்க வேண்டும் என்று உள்ளது. மிக்சி,கிரைண்டர் இலவசம் என தருகிறீர்கள். அடிப்படை தேவை.. ஒவ்வொரு குடும்ப தலைவனால் இதை செய்ய முடியும். நிரந்த வேலைவாய்ப்பு, வருமானம் என ஒருவருக்கு ஏற்படுத்திக் கொடுப்பதுதான் வளர்ச்சியை நோக்கிய பயணம்.
950 கோடிக்கு மகளிர் உரிமை தொகை இலக்கு. ஆனால் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள்,ஆசிரியர்கள் ஆகியோரை நிரந்தரப்படுத்தினால் எவ்வளவு செலவாகும் என்று நினைக்கிறீர்கள். அந்த நேரத்தில் மக்களிடம் ஏதோ ஒரு இனிப்பான செய்தியை சொல்ல வேண்டும் என்பது தான் உங்களின் நோக்கம்.
என்னையும், தம்பி விஜய்யையும் பாஜ பெற்றெடுக்கும் போது பிரசவம் பார்த்துவிட்டாரா திருமாவளவன்? நான் யார் என்று நீங்கள் என்னிடம் தான் கேட்க வேண்டும். தமிழ் தேசியம் பேசிக் கொண்டு இருந்தார் என்று நினைத்தேன் என்கிறார் (திருமாளவனை குறிப்பிடுகிறார்) காலம், காலமாக என்னை போலி தமிழ் தேசியவாதி என்றுதான் பேசிக் கொண்டுள்ளனர்.
அவர் என்னை ஆர்எஸ்எஸ், பாஜ என்றால் நான் ஆர்எஸ்எஸ், பாஜவா? திராவிட கைக்கூலி என்கிறார்கள். ஆனால் ஒருவரும் பத்து பைசா தருவதில்லை. இந்த பொதுக்குழு கூட்டம் நடத்த காசில்லை, திரள் நிதி திரட்டிக் கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு சீமான் பேட்டியளித்தார்.

