கருணாநிதி சமாதிக்கு ரூ.250 கோடி செலவா? கொளுத்தி போட்ட சீமான்
கருணாநிதி சமாதிக்கு ரூ.250 கோடி செலவா? கொளுத்தி போட்ட சீமான்
UPDATED : செப் 23, 2024 02:32 PM
ADDED : செப் 21, 2024 01:20 PM

சிவகங்கை:கருணாநிதி சமாதிக்கு ரூ.250 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளதாக பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுக்கூட்டம்
வரலாறு எம்மை வழிநடத்தும் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
என்ன தெரியும்?
தமிழர் இன வரலாற்றை பேச தொடங்கினாலே எப்போது பார்த்தாலும் பழமைவாதம் பேசுவதாக கூறுகின்றனர். இவர்களுக்கு இதை விட்டால் வேறு என்ன தெரியும் என்று இழிவாக பார்க்கிற, பேசுகிற நிலை இன்றுவரை தொடர்கிறது. வரலாறு என்பது கடந்தகால நிகழ்வுகளை சேமித்து வைக்கிற நோட்டு புத்தகம் அல்ல.
ஓட்டு விழுமா?
நான் கருணாநிதி மகன் அல்ல, எம்ஜிஆர் வாரிசும் அல்ல. 36 லட்சம் வாக்குகள் பெற்று மண்ணில் நிற்கிறேன் என்றால் அதுதான் புரட்சி. கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா, எடப்பாடி ஆகியோர் தனியாக கட்சி ஆரம்பித்து கொள்கை பேசியிருந்தால் நான்கு ஓட்டாவது விழுமா? நாங்கள் சாதி பேசாமல், மதம் பேசாமல் தனித்தே 36 லட்சம் ஓட்டுகள் பெற்றுள்ளோம்.
ரூ.250 கோடி
போய் பாரு, கருணாநிதி 250 கோடியில் சமாதி கட்டி படுத்திருக்கார். ஆனால் உன் பாட்டிக்கு சமாதி இங்கு கடைத்தெருவில் காட்டுகிறேன். ஒரு நாளைக்கு 6 மணிநேரம் பேசி இருக்கிறேன். எல்லா மருத்துவர்களும் இப்படி பேசலாமா என்று கேட்கின்றனர்.
நடிப்பு சூப்பர்
அப்படி பேசியும் இன்னமும் விடியலையே? நேற்று கூட்டத்தில் பேசிவிட்டு போகிறேன். 2 பேர் வந்து மாயாண்டி குடும்பத்தார் படத்தில் சூப்பராக நடித்துள்ளீர்கள்? இப்போது எந்த படத்திலும் நடிக்கவில்லையா? மறுபடியும் படம் எதுவும் எடுக்கவில்லையா? என்று கேட்கின்றனர். அதுதான் அவர்களுக்கு பிரச்னை.
லட்டு சாப்பிடுவேன்
லட்டுவில் மாட்டுக் கொழுப்பு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. நான் எப்படி இருந்தாலும் சாப்பிடுவேன். எனக்கு லட்டு இருந்தால் போதும். லட்டு பற்றி நாடு முழுவதும் பேசுகின்றனர். என் மீனவர்களை தாக்கி, படகுகளை பறிக்கின்றனர். அதை பற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லை.
இவ்வாறு சீமான் பேசினார்.கருணாநிதி சமாதிக்கு 39 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ள நிலையில், 250 கோடி ரூபாய் என்று சீமான் கொளுத்திப் போட்டிருப்பது, அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.