மருத்துவ சுற்றுலா வருவோர் எண்ணிக்கை: தகவல் வெளியிட அதிகாரிகள் மறுப்பு
மருத்துவ சுற்றுலா வருவோர் எண்ணிக்கை: தகவல் வெளியிட அதிகாரிகள் மறுப்பு
ADDED : ஏப் 12, 2025 12:10 AM

சென்னை: தமிழகத்திற்கு மருத்துவ சுற்றுலா வருவோர் எண்ணிக்கை விபரங்களை வெளியிட, அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இதனால், இத்தகைய சுற்றுலா வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலா மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், பிற நாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக, தமிழகம் வருவோர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, கடந்த 2023 முதல் மருத்துவ சுற்றுலா மாநாடு நடத்தப்படுகிறது.
சிகிச்சை தரம்
இரண்டு நாள் நடத்தப்படும் மாநாட்டில், பிற நாட்டு மருத்துவ பிரதிநிதிகள், மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பர்.
மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை தரம், செலவினம், மருத்துவ உட்கட்டமைப்பு குறித்து விவாதிப்பர். மருத்துவ சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையை உயர்த்துவது, மாநாட்டின் நோக்கம்.
அந்த வகையில், முதல் மருத்துவ சுற்றுலா மாநாடு, 2023ம் ஆண்டு சென்னையில் நடந்தது. இதில், 21 நாடுகளைச் சேர்ந்த, 75க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். நடப்பாண்டிற்கான மருத்துவ சுற்றுலா மாநாடு, கடந்த 4ம் தேதி நடந்தது. இதில், 20 நாடுகளில் இருந்து, 40க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பொதுவாக, மாநாட்டில் மருத்துவ சேவைக்காக, பிற நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் எண்ணிக்கை, சுற்றுலா துறை சார்பில் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், முதல் மருத்துவ சுற்றுலா மாநாட்டில், அதிகாரபூர்வ தகவல்களை, சுற்றுலா துறை அதிகாரிகள் வெளியிடவில்லை. மருத்துவ சுற்றுலா வருவோர் எண்ணிக்கை குறைவதால், எண்ணிக்கையை வெளியிட தயங்குவதாக கூறப்படுகிறது.
இது குறித்து, மருத்துவ நிபுணர்கள் சிலர் கூறியதாவது:
15 லட்சம் பேர்
தமிழகத்தில் இது வரை இரண்டு மருத்துவ சுற்றுலா மாநாடு நடத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்திற்கு சுற்றுலா வருவோரில், 15 லட்சம் பேர், மருத்துவ சுற்றுலாவிற்கு வருவதாக சுற்றுலா துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், முதல் மருத்துவ சுற்றுலா மாநாட்டிற்கு பின், வந்தவர்கள் எண்ணிக்கை குறித்த விபரம் வெளியிடப்படவில்லை; இதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை. அதிகாரிகள் அதிகாரபூர்வ தகவல்களை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, சுற்றுலா துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொதுவாக ஒரு மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணியர் குறித்து, துல்லியமான தகவல்களை மத்திய சுற்றுலா துறையால் மட்டுமே வெளியிட முடியும். இதை வெளியிடாமல் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. கடந்த 2023ல் மருத்துவ சுற்றுலாவிற்கு தமிழகம் வந்தோர் 15 லட்சம் பேர்.
கடந்த 2024ல் இந்தியாவிற்கு 71 லட்சம் பேர், மருத்துவ சுற்றுலாவிற்கு வருவர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எவ்வளவு பேர் வந்தனர் என்பது தெரியவில்லை.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையிடமும், எவ்வளவு பேர் மருத்துவ சுற்றுலா வந்தனர் என்ற விபரம் இல்லை. மத்திய அரசு தெரிவித்தால் மட்டுமே, அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட முடியும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.