ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை 45 கோடியாக உயர்வு
ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை 45 கோடியாக உயர்வு
UPDATED : நவ 17, 2025 08:58 AM
ADDED : நவ 17, 2025 08:57 AM

நமது சிறப்பு நிருபர்
சென்னை: தெற்கு ரயில்வேயில், கடந்த ஏழு மாதங்களில், முன்பதிவு இல்லாத பெட்டிகளில், 45 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். அனைத்து விரைவு ரயில்களிலும் தலா நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகள் என்ற இலக்கை, தெற்கு ரயில்வே விரைவில் எட்டவுள்ளது.
தெற்கு ரயில்வேயில், சென்னை உட்பட ஆறு கோட்டங்களில், 727 ரயில் நிலையங்கள் உள்ளன.
இதில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில், பயணியரின் வருகை நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. விரைவு, குறுகிய துார பயணியர் ரயில்கள், மின்சார ரயில்கள் என, 1,400 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இவற்றில், 21.50 லட்சம் பேர் தினமும் பயணம் செய்து வருகின்றனர். பயணியர் பிரிவு வருமானத்தை முதன்மையாக வைத்து, தெற்கு ரயில்வே செயல்பட்டு வருகிறது.
எனவே, கூடுதல் ரயில்கள் இயக்கம், பெட்டிகள் இணைப்பு அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
6 சதவீதம்
குறிப்பாக, முன்பதிவு தேவையில்லாத ரயில்களில், குறைந்த கட்டணத்தில் அதிகமானோர் செல்வதற்கு வசதியாக, அதிக பெட்டிகளை இணைத்து இயக்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் காரணமாக, கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை முன்பதிவு இல்லாத பெட்டிகளில், 45 கோடி பேர் பயணித்துள்ளனர். இதன் வாயிலாக, 1,200 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.இது, அதற்கு முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயை விட, 6 சதவீதம் அதிகம்.
பயணியருக்கான வசதியை ஏற்படுத்தி தருவதிலும், கூடுதல் ரயில்கள் இயக்குவதிலும், தொடர்ந்து கவனம் செலுத்தப்படுகிறது.
இது குறித்து, தெற்கு ரயில்வேயின் தலைமை வணிக மேலாளர் செந்தில்குமார் அளித்த பேட்டி: இந்திய ரயில்வேயின் மொத்த வருவாயில், சரக்கு பிரிவின் பங்களிப்பு 66.6 சதவீதம், பயணியர் பிரிவின் பங்களிப்பு 27.4 சதவீதம். ஆனால், தெற்கு ரயில்வேயில், பயணியர் பிரிவு வருமானம் 70 சதவீதமாகவும், சரக்கு பிரிவு வருவாய் 30 சதவீதமாகவும் இருக்கிறது. தெற்கு ரயில்வேக்கு பயணியர் பிரிவு வருமானம் தான் உயிர் நாடியாக உள்ளது.
எனவே, பயணியருக்கான வசதியை ஏற்படுத்தி தருவதிலும், கூடுதல் ரயில்கள் இயக்குவதிலும், தொடர்ந்து கவனம் செலுத்தப்படுகிறது. நடப்பு நிதியாண்டில், மொத்த பயணியர் எண்ணிக்கை 77.41 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.



முதலிடம்
இதில், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை 66.79 கோடியாக இருக்கும் என நம்புகிறோம். கடந்த ஏழு மாதங்களில் மட்டும், 45 கோடி பேர் பயணம் செய்துஉள்ளனர்.
இதற்கு முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்தில், 44.70 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். அனைத்து விரைவு ரயில்களிலும், தலா நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இதுவரை, 261 முன்பதிவு இல்லாத பெட்டிகளை கூடுதலாக இணைத்துள்ளோம். பயணியர் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரயில்கள், கூடுதல் பெட்டிகள் இணைப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுகிறது. நாட்டிலேயே தாமதமின்றி ரயில்கள் இயக்குவதில், தெற்கு ரயில்வே முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

