ADDED : ஜூலை 31, 2025 11:45 PM
சென்னை:காலி பணியிடங்களை நிரப்புவது உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், ஏழு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:
சத்துணவு துறையில் காலியாக உள்ள 60,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த நான்கு ஆண்டில், பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். ஆனாலும், அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஏழு கட்ட தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
முதல் கட்டமாக, வரும் 20ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் ஒருநாள் மறியல் போராட்டம் நடத்தப்படும். தொடர்ந்து செப்., 20ல் திருச்சியில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு; அக்., 8ல் தற் செயல் விடுப்பு போராட்டம்; நவ., 7ல் சென்னையில் பேரணி; டிச., 17ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.