போலி 'அசைன்மென்ட்' பட்டாக்களில் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு
போலி 'அசைன்மென்ட்' பட்டாக்களில் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு
ADDED : ஆக 30, 2025 05:50 AM

சென்னை: தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளில் வழங்கப்பட்ட, 'அசைன்மென்ட்' பட்டாக்களை முழுமையாக ஆய்வு செய்து, போலிகளை கண்டுபிடிக்க வருவாய் துறை உத்தரவிட்டும், அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசுக்கு தேவைப்படாத புறம்போக்கு நிலங்களில், நீண்ட காலமாக குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்கப்படும்.
37 லட்சம் அதேபோல, சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில், குறிப்பிட்ட புறம் போக்கு நிலங்களை அரசு தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஒதுக்கி, 'அசைன்மென்ட்' என்ற பட்டாவை வழங்கும்.
கடந்த, 2011 - 2024 வரையிலான காலகட்டத்தில், 37 லட்சம் பட்டாக்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டன. அவற்றில், 14 லட்சம், 'அசைன்மென்ட்' பட்டாக்கள். அதேநேரத்தில், போலி, 'அசைன்மென்ட்' பட்டாக்கள் வாயிலாக, ஏராளமானோர் அரசு நிலங்களை ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், போலி, 'அசைன்மென்ட் பட்டா'க்களை கண்டுபிடித்து, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கும்படி உத்தரவிட்டது.
துவக்கவில்லை
அதனடிப்படையில், அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்களை கண்டுபிடிக்க, வருவாய் துறை செயலர் அமுதா கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனாலும், போலி, 'அசைன்மென்ட்' பட்டாக்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை இன்னும் துவக்கப்படவில்லை.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
போலி அசைன்மென்ட் பட்டாக்களை கண்டுபிடிக்க, பல மாவட்டங்களில், மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஆனாலும், பணியாளர் பற்றாக்குறை, சிறப்பு முகாம்கள் போன்ற கூடுதல் பணி காரணமாக, இப்பணிகள் முடங்கியுள்ளன. எனவே, கூடுதல் அவகாசம் கோரப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.