UPDATED : ஜன 18, 2024 01:05 AM
ADDED : ஜன 18, 2024 01:04 AM

''வசூல் பிளானை மாத்திட்டா ஓய்...'' என, பெஞ்சில் முதல் ஆளாக பேச்சை ஆரம்பித்தார், குப்பண்ணா.
''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சி.எம்.டி.ஏ.,வுல, 10,763 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு, துணை திட்ட அதிகாரி நிலையில் ஒப்புதல் வழங்கப்படும்... 2 ஏக்கர் வரையிலான மனை பிரிவுகளுக்கு, உறுப்பினர் செயலர் நிலையில ஒப்புதல் தருவா ஓய்...
''ஆனா, இப்ப இந்த வரம்புகளை கடந்து, அனைத்து திட்டங்களின் பட்டியலும் துறை மேலிடத்துக்கு போயிடறது... அங்க, அனைத்து திட்டங்களுக்கும் சதுர அடி அடிப்படையிலும், ஏக்கர் ரீதியாகவும் கமிஷன் வெட்டியே ஆகணும்கறா ஓய்...
![]() |
''இதனால, 'இந்த திட்டங்களுக்கு, ஏற்கனவே அதிகாரிகள் நிலையில கமிஷன் வெட்டிய நிலையில, இப்ப மேலிடத்துக்கும் தண்டம் அழணுமா'ன்னு பில்டர்ஸ் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரி பஞ்சாயத்தை கேளுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''இந்த கல்லுாரியில, 2020ம் ஆண்டில் பணிபுரிந்த பெண் விரிவுரையாளர், கனடா - இந்தியா கூட்டு பயிற்சி திட்டத்துல, படிக்க வந்த மாணவர்கள் கட்டணத்துல முறைகேடு செய்துட்டாங்க... அப்புறமா, அந்த பணத்தை வட்டியுடன் கட்டி, தப்பிச்சிட்டாங்க...
''அதன்பின், கரூர் அரசு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு போயிட்டு, பதவி உயர்வோட மறுபடியும் மதுரை கல்லுாரிக்கே வந்துட்டாங்க...
''மதுரை கல்லுாரியில, முன்னாள் மாணவர் சங்கம் கூட்டம் நடத்துனா தகராறு ஏற்படுதுங்கிறதால, விழா நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தடை விதிச்சிருக்காருங்க... ஆனா, அதை மதிக்காம, மாணவர்கள் சங்க கூட்டத்தை நடத்த, பெண் அதிகாரி வாய்மொழி உத்தரவு பிறப்பிச்சிருக்காங்க... இது சம்பந்தமா, முதல்வர் வரைக்கும் புகார் போயிருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
டீ கடை ரேடியோவில் ஒலித்த, 'செந்தமிழ் தேன்மொழியாள்...' என்ற பாடலை ரசித்த பெரியசாமி அண்ணாச்சி, ''மூடி மறைச்சுட்டாவ வே...'' என்றார்.
''என்ன விஷயத்தை பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருப்பூர் மாவட்டம், அவிநாசி சப் - டிவிஷன் போலீஸ் அதிகாரி, ஏலத்துல ஒரு பயணியர் ஆட்டோ வாங்கியிருக்காரு... இந்த ஆட்டோவை, நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில இருக்கிற தன் சொந்தக்காரரிடம் குடுத்துட்டு வரும்படி, தன் ஆபீஸ் டிரைவரான போலீஸ்காரர் அருள்குமாருடன், இன்னொரு போலீஸ்காரரையும் அனுப்பியிருக்காரு வே...
''அந்த ஆட்டோ, விருதுநகர் பக்கம் விபத்துல சிக்கி, டிரைவர் அருள்குமார் இறந்து போயிட்டாரு... மற்றொரு போலீஸ்காரர், காயங்களோட தப்பிட்டாரு வே...
''தகவல் கிடைச்சதும் சப் - டிவிஷன் அதிகாரி, அரக்க பறக்க விருது நகருக்கு போய், சிகிச்சையில இருந்த போலீஸ்காரரை, தனியார் மருத்துவமனைக்கு மாத்திட்டாரு... அவரிடம், உள்ளூர் போலீசார் விசாரிச்சு, உண்மையை கறந்துட கூடாதுன்னு தான் இந்த அவசரம்...
''அதேபோல, தன் அவிநாசி ஆபீஸ்லயும் ரெண்டு போலீசாரும், சொந்த வேலையா விடுப்புல போனதா ஆவணங்களை, 'கரெக்ட்' பண்ணிட்டாரு... இந்த சூழல்ல, அதிகாரிக்கும் வழக்கமான டிரான்ஸ்பர் வந்து, வெளியூர் போயிட்டாரு வே...
''அருள்குமாரின் மனைவியும், அவரது இரண்டு சின்ன பெண் குழந்தைகளும், இப்ப அனாதையா தவிக்காவ... இதெல்லாம் எஸ்.பி., உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுக்கு தெரிஞ்சும், அதிகாரியை காப்பாத்துறதுல தான் குறியா இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''பவுல்ராஜ், ஒரு நிமிஷம்...'' என்றபடியே, நண்பரை நோக்கி அந்தோணிசாமி நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.