அரசு நிலத்தை ஆக்கிரமித்து குவாரி மாஜியின் உதவியாளர் மகன் கைது
அரசு நிலத்தை ஆக்கிரமித்து குவாரி மாஜியின் உதவியாளர் மகன் கைது
ADDED : ஆக 03, 2011 01:26 AM
திண்டுக்கல் : புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து குவாரி அமைத்த, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் உதவியாளர் தங்கவேலுவின் மகன் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் கனிமவளத்துறை உதவி இயக்குனர் சிவாஜி, சந்திரசேகரன் எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தார். இதில், 'வத்தலக்குண்டு காந்தி நகரைச் சேர்ந்த தங்கவேல் மகன் அசோக்குமார், 36, விராலிப்பட்டியில் ஐந்து ஏக்கர் நிலத்தில் கல் குவாரி வைக்க கலெக்டரிடம் அனுமதி கேட்டார்.
'இதன்படி, 2007, டிச., 7 முதல் 2017 வரை அனுமதி வழங்கப்பட்டது. குவாரிக்கு அருகே உள்ள புறம்போக்கு நிலம், 4.98 ஏக்கரை ஆக்கிரமித்து கல் எடுத்து வருகிறார். இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. இதை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன், அத்துமீறி அரசு நிலத்தில் நுழைந்தது, கல் திருடுவது, கனிமவள சட்ட மீறல் பிரிவுகளில், அசோக்குமார் மீது வழக்கு பதிந்து, கைது செய்தார். அசோக்குமாரின் தந்தை தங்கவேல், முன்னாள் அமைச்சரின் உதவியாளராக செயல்பட்டவர். அசோக்குமார், தேசிய நெடுஞ்சாலை கான்ட்ராக்ட் பணிகளும் செய்து வந்தார். வத்தலக்குண்டு காந்திநகர் சேரன் தெருவில் உள்ள தங்கவேலு, அதே பகுதியில் உள்ள தி.மு.க., மாவட்ட பிரதிநிதி மாரியப்பன் வீடுகளில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். டி.எஸ்.பி., க்கள் நடராஜமூர்த்தி, சுருளிராஜா, அன்னம் தலைமையில் நடந்த சோதனையில் நில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மாலை 4.30 மணிக்கு துவங்கி மூன்று மணி நேரம் சோதனை நீடித்தது. சோதனையின் முடிவில், வீட்டிற்கு வெளியே கூடியிருந்த தி.மு.க., வினர், 'பொய் வழக்கு போடாதே' என, கோஷம் எழுப்பினர்.