டீக்கடை பெஞ்ச்: லஞ்ச வசூலுக்கு 'லாஜிக்' சொல்லும் அதிகாரி!
டீக்கடை பெஞ்ச்: லஞ்ச வசூலுக்கு 'லாஜிக்' சொல்லும் அதிகாரி!
ADDED : பிப் 28, 2024 12:11 AM

''ஒரே ஊரைச் சேர்ந்த ரெண்டு பேருக்கு, 'பவர்புல்' பதவியான்னு புலம்புதாவ வே...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழக சட்டசபை காங்., தலைவரா ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.,வை நியமிச்சிருக்காங்கல்லா... ஏற்கனவே, தமிழக காங்., பொருளாளரா, நாங்குநேரி எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் இருக்காரு வே...
''இவங்க ரெண்டு பேருமே கிறிஸ்துவ நாடார் சமூகம்... ரெண்டு பேரும், கன்னியாகுமரி மாவட்டத்துக்காரங்களும் கூட... இப்படி ஒரே மாவட்டம், ஒரே சமூகத்துக்கு முக்கிய பதவிகளை குடுத்ததுல, கட்சியில இருக்கிற மற்ற சமூகத்தினர் அதிருப்தியில இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''அமைச்சருக்கு பழைய பாசம் போகலையான்னு கேட்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த மாவட்ட விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''ஈரோடு மாவட்டத்துல இருக்கிற எட்டு சட்டசபை தொகுதிகள்ல தி.மு.க., - 2, காங்., - பா.ஜ., தலா 1, அ.தி.மு.க.,வுக்கு 4 எம்.எல்.ஏ.,க்கள் இருக்காங்க... மாவட்டத்தைச் சேர்ந்த வீட்டுவசதி துறை அமைச்சரான முத்துசாமி, எல்லா கட்சியினரிடம் நல்ல பெயர் எடுக்க நினைக்கிறாரு பா...
''இதனால, அரசு திட்ட பணிகள், எம்.பி., - எம்.எல்.ஏ., நிதியில செய்ற பணிகளுக்கான டெண்டர்களை தி.மு.க.,வினருக்கு மட்டும் தான் தரணும்னு சொல்றது இல்ல... அந்தந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு வேண்டியவங்களுக்கு டெண்டர்களை வாங்கி குடுத்துடுறாங்க பா...
''இதனால, அந்த தொகுதி ஆளுங்கட்சியினர் நாலு காசு சம்பாதிக்க முடியாம புலம்புறாங்க... அதையும் மீறி தி.மு.க.,வினர் குறுக்கிட்டா, அந்த தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் நேரடியா அமைச்சரிடம் புகார் பண்ணிடுறாங்க பா...
''உடனே அமைச்சரும், தி.மு.க.,வினரை கூப்பிட்டு கண்டிக்கிறார்... 'கட்சி பணி, நிதி வசூலுக்கு மட்டும் எங்களை தேடுற அமைச்சர், சம்பாதிக்கிற வாய்ப்புகளை மற்ற கட்சிக்காரனுக்கு குடுத்தா, நம்ம கட்சி எப்படி வளரும்'னு தி.மு.க.,வினர் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''கொடுத்ததை திருப்பி எடுக்க வேணாமோன்னு, 'லாஜிக்' பேசறார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார், குப்பண்ணா.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவுல இருக்கற அதிகாரியை தான் சொல்றேன்... எந்த வேலையா இவரிடம் போனாலும், 'வெயிட்' வைக்காம காரியம் முடியாதுங்கறா... வசூல் விவகாரத்துல, தனக்கு கீழ இருக்கற அதிகாரிகள், ஊழியர்களை இவர் நம்பறது இல்லை... தானே டீலிங் பேசி வசூல் பண்ணிடறார் ஓய்...
''அதுவும் இல்லாம, ரெய்டு போறேன்னு, தன் சொந்த வாகனத்தை எடுத்துண்டு போய், மண் மாபியா கும்பலிடம் மாமூல் வசூலிக்கறார்... யாராவது தட்டி கேட்டா, 'இந்த இடத்துக்கு பல லட்சம் குடுத்துதான் வந்திருக்கேன்... அதை எல்லாம் திரும்ப எடுக்க வேண்டாமா'ன்னு திருப்பி கேக்கறார்...
''இப்படி அதிகாரி ஓடியாடி வசூல் வேட்டை நடத்தினாலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் குறட்டை விட்டு துாங்கிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''கோவிந்தசாமி இங்கன உட்காரும்... நாங்க கிளம்புதோம்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

