அரசு மருத்துவமனைகளில் நாய்கள் உலா; விரட்ட முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
அரசு மருத்துவமனைகளில் நாய்கள் உலா; விரட்ட முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
ADDED : ஜன 03, 2026 02:12 AM
சென்னை: 'அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள் உணவுகளை ஆங்காங்கே கொட்டுவதால், அவற்றை சாப்பிட வரும் தெருநாய்களை விரட்ட முடியவில்லை' என, மருத்துவமனை அதிகாரிகள் புலம்புகின்றனர்.
'கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில், தெருநாய்கள் நுழைவதை தடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நாய்கள் உலா வருவதை தடுக்கும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், வட்டார மருத்துவ அதிகாரி, அரசு மருத்துவமனைகளில், தலைமை மருத்துவ அதிகாரி, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், நிலைய மருத்துவ அதிகாரிகளை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, ஒவ்வொரு மருத்துவ அதிகாரிகளும், தெரு நாய்கள் மருத்துவமனை வளாகத்தில் நுழைவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், நாய்களை விரட்ட முடியவில்லை.
இதுகுறித்து, மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:
மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள், தாங்கள் சாப்பிட்ட பின், மீதி உணவை, நாய்களுக்கு வழங்குகின்றனர்.
ஆங்காங்கே மருத்துவமனை வளாகத்தில் உணவுகள் கொட்டப்படுவதால், நாய்கள், அதை உண்பதற்காக தொடர்ந்து மருத்துவமனைக்கு வருவதையும், அங்கேயே தங்குவதையும் வாடிக்கையாக வைத்து உள்ளன.
அந்த நாய்களை விரட்டி விட்டாலும், சாப்பாட்டு நேரத்திற்கு, எப்படியாவது மீண்டும் மருத்துவமனைக் குள் நுழைந்து விடுகின்றன. நாய்கள் வராமல் இருக்க, மருத்துவமனை வளாகத்தை அவ்வப்போது சுத்தப்படுத்தினாலும், இப்பிரச்னை முடிவுக்கு வரவில்லை.
இந்நாய்கள் பெரும்பாலும் மனிதர்களுடன் வாழ்வதால், அவை கடிப்பதில்லை. ஆனால், அவை எப்போதும் மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காது என்பதை உறுதியாக கூற முடியாது.
எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றும் வகையில், உள்ளாட்சிகள் அமைப்புகள், மருத்துவமனை அருகே சுற்றித்திரியும் நாய்களை பிடித்து, வேறு இடத்திற்கு அப்புறப் படுத்த வேண்டும்.
இல்லையென்றால், மருத்துவமனைகளில் நாய் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

