மீண்டும் கையேந்தும் பள்ளிக்கல்வி துறை ரூ.80 கோடி வசூலிக்க அதிகாரிகளுக்கு நெருக்கடி
மீண்டும் கையேந்தும் பள்ளிக்கல்வி துறை ரூ.80 கோடி வசூலிக்க அதிகாரிகளுக்கு நெருக்கடி
UPDATED : நவ 01, 2025 01:06 AM
ADDED : நவ 01, 2025 12:11 AM

அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், 80 கோடி ரூபாயை நன்கொடையாக பெற வேண்டும் என, அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
'அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்' என, முதல்வரும், பள்ளிக்கல்வி துறை அமைச்சரும் பேசி வருகின்றனர். அதேநேரம், மழையில் ஒழுகும் கூரை, கழிப்பறை இல்லாத பெண்கள் பள்ளி என, பல்வேறு அவலங்களையும் அரசு பள்ளிகள் சந்திக்கின்றன.
இதனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் குறைகிறது. இருக்கும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் கண்டிப்பு காட்டினால், அவர்கள் இடைநிற்கும் அவலமும் உள்ளது.
அதிக சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்கள், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு பள்ளிகளை தரம் உயர்த்தி, மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய சவாலான நிலையில், தமிழக அரசு உள்ளது.
இந்நிலையில், பெரு நிறுவன சமூக பங்களிப்பு நிதியாக, 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' எனும், நன்கொடை வசூலிக்கும் திட்டத்திற்கு, 80 கோடி ரூபாயை திரட்ட வேண்டும்.
அதை, நாளை மறுநாள் சேலத்தில் நடக்கும் பள்ளிக்கல்வி துறை கூட்டத்தில் வழங்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது வரை தமிழகம் முழுதும் உள்ள பெரு நிறுவனங்களிடம் இருந்து, 60 கோடி ரூபாய் வரை திரட்டுவதாக வாக்குறுதி அளித்துள்ள அதிகாரிகள், மேலும், 20 கோடியை திரட்ட வேண்டுமே என்ற நெருக்கடியில் உள்ளனர்.
- நமது நிருபர் -

