கோவில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகள் கடமை: உயர் நீதிமன்றம்
கோவில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகள் கடமை: உயர் நீதிமன்றம்
ADDED : செப் 16, 2025 07:14 AM

விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சொத்துக்களை பாதுகாக்க தாக்கலான வழக்கில், 'ஏற்கனவே அரசு நடவடிக்கையை துவங்கியுள்ளது. அறநிலையத்துறை சட்டப்படி கோவில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
சாத்துார் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு, மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடித் திருவிழா நடைபெறும். கோவிலை நிர்வாகம் முறையாக நிர்வகிக்கவில்லை. நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது. வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கோவில் வளாகம், கழிப்பறைகளை துாய்மையாக பராமரிக்கவில்லை. வணிக வளாகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுப்பாதை, கோவிலை சுற்றிலும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன்; நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, கோவில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை அறநிலையத்துறை இணை கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அறநிலையத்துறை சட்டப்படி கோவில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை. ஏற்கனவே நடவடிக்கை துவங்கியுள்ளதால், இம்மனுவை மேலும் பரிசீலிக்க தேவையில்லை.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.
- நமது நிருபர் -