அரசாணையை செயல்படுத்த மறுக்கும் அதிகாரிகள்; பி.ஏ.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
அரசாணையை செயல்படுத்த மறுக்கும் அதிகாரிகள்; பி.ஏ.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
UPDATED : ஏப் 17, 2025 05:00 AM
ADDED : ஏப் 16, 2025 11:49 PM

உடுமலை; அரசாணையின் படி, திருமூர்த்தி அணையிலிருந்து, ஆலாம்பாளையம் குளத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தி, உடுமலை நீர்வளத்துறை அலுவலகத்தை, 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே ஆலாம்பாளையத்தில், 76 ஏக்கர் பரப்பில், பூசாரிநாயக்கன் குளம் அமைந்துள்ளது.
சுற்றுப்புறத்திலுள்ள குறிச்சிக்கோட்டை, மடத்துார், குரல்குட்டை, மலையாண்டிபட்டணம், மருள்பட்டி, உரல்பட்டி என பல்வேறு கிராமங்களுக்கு, நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும், 10க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களின் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
இக்குளத்துக்கு, திருமூர்த்திமலையிலிருந்து உருவாகும் பாலாறு வழியாக, நீர்வரத்து கிடைத்து வந்தது. திருமூர்த்தி அணை, பி.ஏ.பி., திட்டம் உருவாக்கப்பட்டதால், குளத்திற்கு நீர் வரத்து முற்றிலும் தடைபட்டது.
இதனையடுத்து, அப்பகுதி விவசாயிகளின் பல்வேறு போராட்டங்களுக்குப்பின், கடந்த, 2008ம் ஆண்டு, பி.ஏ.பி., துணை அமைப்பாக இக்குளம் சேர்க்கப்பட்டு, ஆண்டுக்கு, 39.86 மில்லியன் கனஅடி நீர் வழங்க அரசு உத்தரவும், உயர் நீதிமன்ற உத்தரவும் உள்ளது.
அதன் அடிப்படையில், நடப்பு ஆண்டு இரண்டாம் சுற்றாக, திருமூர்த்தி அணை பொது கால்வாய், 1.20 கி.மீ.,ல் பிரியும் உடுமலை கால்வாயில், 5.130 கி.மீ.,ல் அமைந்துள்ள, மானுப்பட்டி கிளை கால்வாய், 2.65 வது கி.மீ.,ல் அமைந்துள்ள மதகு வழியாக, கடந்த, 7ம் தேதி முதல், 9ம் தேதி வரை, 20 மில்லியன் கன அடி நீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
ஆனால், அரசு உத்தரவு அடிப்படையில், அதிகாரிகள் நீர் திறக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசு ஆணையை உடனடியாக செயல்படுத்த வேண்டும், என வலியுறுத்தியும், உடுமலை பி.ஏ.பி., செயற்பொறியாளர் அலுவலகத்தை, சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கூறியதாவது:
பி.ஏ.பி., திட்டம் துவங்குவதற்கு முன், பாலாறு ஓடைகள் வாயிலாக நீர் வரத்து காணப்பட்ட குளம் என்பதால், துணை அமைப்பாக கருதி, ஆண்டுக்கு இரு முறை குளத்திற்கு நீர் திறக்க அனுமதி உள்ளது.
தற்போது, அரசு ஆணை இருந்தும், பி.ஏ.பி., திட்ட குழுவின் பெயரில், ஒரு சிலர் துாண்டுதல் காரணமாக, தண்ணீர் திறக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். அரசு உத்தரவு, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு தடை ஏற்படுத்தி, அதிகாரிகளை மிரட்டி வருகின்றனர்.
பி.ஏ.பி., திட்டம் துவங்கியதிலிருந்து, முதல் முறையாக வட்டமலைக்கரை ஓடைக்கும், உப்பாறு அணைக்கும் நீர் வழங்கிய போது, இதே நபர்கள் கண்டு கொள்ளவில்லை.
பாலாற்றின் துணை அமைப்பாகவும் உள்ள, ஆலாம்பாளையம் குளத்திற்கு மட்டும் தண்ணீர் திறக்க, எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
வறட்சியால் சுற்றுப்புற கிராமங்கள் பாதித்து வரும் நிலையில், பொதுமக்களின் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் தேவைக்காக, 20 மில்லியன் கன அடி நீர், பூசாரிநாயக்கன் ஏரிக்கு திறப்பதற்கு, ஒரு சிலரின் மிரட்டல் காரணமாக , அரசு உத்தரவை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகமும், நீர் வளத்துறை அதிகாரிகளும் தயங்கி வருகின்றனர்.
அரசு உத்தரவு அடிப்படையில், பூசாரி நாயக்கன் குளத்திற்கு நீர் திறக்காவிட்டால், தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.