ஓசூர் விமான நிலையம் அனுமதி இல்லை என அதிகாரிகள் கைவிரிப்பு; இருந்தாலும் நிலம் எடுப்புக்கு தொடர் எதிர்ப்பு
ஓசூர் விமான நிலையம் அனுமதி இல்லை என அதிகாரிகள் கைவிரிப்பு; இருந்தாலும் நிலம் எடுப்புக்கு தொடர் எதிர்ப்பு
ADDED : ஜன 28, 2026 09:24 AM

ஓசூர்: ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், அது தொடர்பான நிலம் எடுப்பு பணிக்கு விவசாயிகளின் எதிர்ப்பு தொடர்கிறது. வராத விமான நிலையத்திற்கு, அரசு நிலம் எடுப்பது ஏன் என, விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி தாலுகாவிற்கு உட்பட்ட, பலவனப்பள்ளி, முத்தாலி, அடவனப்பள்ளி, தாசப்பள்ளி, பெத்த முத்தாலி, அட்டூர், அலேநத்தம், காருப்பள்ளி, நந்திமங்கலம், சூடகொண்டப்பள்ளி, வெங்கடேசபுரம், மிடுதேப்பள்ளி ஆகிய, 12 கிராமங்களில், பன்னாட்டு விமான நிலையம் அமைக்க, 2,980 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுக்கூட்டம்
அதே போல, ஓசூர் அருகே மோரனப்பள்ளியிலிருந்து, எழுவப்பள்ளி வரை, 'அறிவுசார் வழித்தடம்' என்ற பெயரில், 15 கி.மீ., துாரத்திற்கு வெளிவட்ட சாலை மற்றும் அதன் இருபுறமும், 500 மீட்டர் துாரத்திற்கு மொத்தம், 3,700 ஏக்கர் நிலத்தை, அரசு கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்திட்டங்களால் பாதிக்கப்படும் கிராம மக்கள், விவசாயிகள், நிலங்களை வழங்க மாட்டோம் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, ஓசூர் அருகே முத்தாலியில், நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடந்தது. ''ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், விவசாய நிலங்களை அரசு ஏன் கையகப்படுத்துகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது''
தொடர்ந்து, விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, 'எஸ்.டி.ஆர்.ஆர்., விவசாயிகள் அசோசியேஷன்' சார்பில், பெத்தகொள்ளு கிராமத்தில் நேற்று, 2வது நாளாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், 1,500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அதில், 'உயிரே போனாலும் நிலத்தை, அரசிடம் வழங்க மாட்டோம்' என, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.
இதற்கிடையே, ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு, மத்திய அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், விவசாய நிலங்களை அரசு ஏன் கையகப்படுத்துகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து, விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் கூறுகையில், 'ஓசூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக, இரு ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு முயற்சி எடுத்தது. மத்திய அரசு அனுமதியும் கோரியது. ஆனால், பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின், இது தொடர்பாக, அனுமதி கேட்டு யாரும் எங்களை அணுகவில்லை.
தகவல் இல்லை
'தமிழக அரசு தரப்பில் மீண்டும் அனுமதி கேட்டு முயற்சி எடுக்கப்பட்டால், இயக்குநரகம் பரிசீலிக்கும். ஆந்திராவின் குப்பத்தில் விமான நிலையம் அமைக்க முயற்சிப்பது தொடர்பாக எங்களுக்கு அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை. ஆந்திர அரசு அதிகாரிகள் யாரும், இது தொடர்பாக எங்களை தொடர்பு கொள்ளவும் இல்லை' என்றனர்.

