தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்: அன்புமணி கேள்வி
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும்: அன்புமணி கேள்வி
ADDED : ஆக 25, 2024 12:25 PM

சென்னை: தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு:
மத்திய அரசு பணியில் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறையில் எவ்வளவு ஊதியம் வழங்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது தான் புதிய ஓய்வூதிய முறையின் பெரும் குறை. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது பழைய ஓய்வூதியத்திற்கு மாற்றாக முடியாது.
மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மாறிவிட்ட நிலையில், 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.,வும் பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை அளித்திருந்தது. ஆனால், அதை நிறைவேற்றுவதற்கான முயற்சியைக் கூட மேற்கொள்ளவில்லை.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தியும் அதை செயல்படுத்த தமிழக அரசு மறுக்கிறது. தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றது அல்ல.
தமிழக அரசு நினைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அடுத்த மாதமே செயல்படுத்தலாம். ஆனால், அதை செய்ய தி.மு.க., அரசுக்கு மனம் இல்லை. வாழ்நாளில் 30 முதல் 35 ஆண்டுகள் வரை பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வுக்கு பின்னர் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு.
அரசு ஊழியர்களின் வாக்குகளை பெற அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமையும் தி.மு.க., அரசுக்கு உண்டு. இந்த இரண்டையும் நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.