கத்தாரை தொடர்ந்து ஓமனும் முட்டை இறக்குமதிக்கு தடை
கத்தாரை தொடர்ந்து ஓமனும் முட்டை இறக்குமதிக்கு தடை
ADDED : டிச 19, 2024 04:25 AM

நாமக்கல்: கத்தார் நாட்டை தொடர்ந்து ஓமன் நாடும், இந்திய முட்டை இறக்குமதிக்கு அனுமதி மறுத்துள்ளதால், துறைமுகம் மற்றும் நடுக்கடலில், 1.90 கோடி முட்டைகள் தேங்கியுள்ளன. இதனால், முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 7 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினசரி, 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கத்தார் அரசு, இரண்டு மாதங்களுக்கு முன், எடை குறைந்த முட்டைகளுக்கு தடை விதித்தது. இதனால், நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த பாதிப்பு மறைவதற்குள், ஓமன் நாடும், இந்திய முட்டைகளுக்கு புதிய இறக்குமதி வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, துாத்துக்குடி, கொச்சியில் இருந்து ஓமனுக்கு, 45 கன்டெய்னர்களில் அனுப்பப்பட்ட முட்டைகளை இறக்க அந்த நாட்டு அரசு அனுமதிக்கவில்லை.
இதனால், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.20 கோடி முட்டைகள் கன்டெய்னரில் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஓமன் நாட்டின் அறிவிப்பால், முட்டை ஏற்றுமதி மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளதால், ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.