ஆம்னி பஸ்கள் கட்டணமும், ஆண்டுதோறும் அரசு போடும் வேஷமும்! சட்டவிரோதம் என தெரிந்தும் இயக்க தாராள அனுமதி
ஆம்னி பஸ்கள் கட்டணமும், ஆண்டுதோறும் அரசு போடும் வேஷமும்! சட்டவிரோதம் என தெரிந்தும் இயக்க தாராள அனுமதி
UPDATED : அக் 14, 2025 06:02 AM
ADDED : அக் 14, 2025 03:24 AM

சாராயம் விற்போர், போதைப்பொருள் விற்போர், காவல் துறைக்கு தெரியாமல் அந்த தொழிலை செய்வது வழக்கம். போலீசாருக்கு தகவல் கிடைத்தால், அவர்களை பிடிக்க தனிப்படை அமைப்பதும், கைது செய்து நடவடிக்கை எடுப்பதும் வாடிக்கை.
ஆனால், 'இங்கு சாராயம் விற்கப்படும்' என ஆன்லைனில் விளம்பரப்படுத்தி, வெ ளிப்படையாக ஒருவர் விற்பனை செய்தால், அவரை உடனடியாக கைது செய்யாமல், அவர் குறித்து யாராவது புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என, போலீசார் சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படியொரு செயலை ஆண்டுதோறும் தமிழக அரசு செய்து வருகிறது.
புரியாத புதிர்
எந்த கட்சியின் ஆட்சி நடந்தாலும், இதில் மட்டும் ஒரே காட்சிகள். மக்களுக்கும் பழகிப் போச்சு; வழக்கமானது என்றே கடந்து செல்கின்றனர். மக்களை அரசு முட்டாள்களாக நினைக்கிறதா அல்லது அரசை முட்டாள்களாக மக்கள் பார்க்கின்றனரா என்பது புரியாத புதிர். என்ன புரியவில்லையா? விஷயத்திற்கு வருவோம்...
மாநகரங்கள் வளரும் அளவிற்கு சிறிய நகரங்கள், கிராமங்களில் வளர்ச்சி இல்லை. கல்வி, வேலை, மருத்துவம் போன்றவற்றுக்காக, நகரங்களை நோக்கி செல்லும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு மாநகரங்களில் குடியேறுவோரில் பெரும்பாலானோர், தங்கள் சொந்த ஊரை மறக்க முடியாமல், நகரில் வாழப் பிடிக்காமல், வேறு வழியின்றி வாழ்வாதாரத்திற்காக தங்கள் காலத்தை நகரங்களில் கடத்துகின்றனர்.
அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவது பண்டிகைகளே. பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை கிடைத்தால், உடனே தங்கள் சொந்த ஊர் நோக்கி பயணிக்கின்றனர்.
முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என முக்கியமான பண்டிகை காலத்தில், நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசலை பார்க்க முடியும். தற்போது காலம் மாறி விட்டது. சனி, ஞாயிறுடன் கூடுதலாக ஒரு நாள் விடுப்பு கிடைத்தால் போதும், நெடுஞ்சாலையில் வாகனங் கள் அணிவகுக்கின்றன.
சென்னையில் இருந்து குறுகிய துாரத்தில் உள்ள மாவட்டங்களுக்கு செல்வோர் பெரும்பாலும் அரசு பஸ்களில் பயணம் செய்து தப்பி விடுகின்றனர். ஆனால், சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், துாத்துக்குடி, ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் செல்வோருக்கு, பயணமே சுமையாகிறது.
சட்ட விரோதம்
விரைவு ரயில்களில் இரண்டு மாதங்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில், அனைத்தும் விற்று தீர்ந்து விடுகின்றன. அடுத்து மக்கள் தேடுவது பஸ்களை.
ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இந்த வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்; வழக்கமான நாட்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட, பல மடங்கு கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்கின்றனர்.
உதாரணமாக, சென்னை - நாகர்கோவில் ஆம்னி 'ஏசி' பஸ்களில், 2,000 - 4,000 ரூபாய் வரை; திருநெல்வேலிக்கு 2,200 - 3,000 ரூபாய் வரை; மதுரைக்கு 2,000 - 2,800 ரூபாய் வரை; கோவைக்கு 2,000 - 2,500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
இது, வழக்கமான நாட்களை விட 50 சதவீதம் கூடுதல். இதனால், சாதாரண மக்கள் பண்டிகை காலங்களில் வெளியூர் செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. இவை அனைத்தும் சட்ட விரோதம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், வெளிப்படையாக இந்த சட்ட விரோத செயல் நடக்கிறது.
நடவடிக்கை ஆம்னி பஸ்களை சுற்றுலா வாகனங்களாக இயக்க மட்டுமே, தமிழக அரசு சார்பில் 'பர்மிட்' வழங்கப்படுகிறது. அதாவது, ஒரு இடத்தில் இருந்து கடைசியாக செல்லும் இடத்திற்கு மக்களை ஏற்றிச் செல்லலாம்; இடையில் பஸ்களை நிறுத்தி, பயணியரை ஏற்றக்கூடாது.
ஆனால், ஆம்னி பஸ்களோ, வழக்கமான அரசு பஸ்களை போல பயணியரை ஏற்றிச் செல்கின்றன. இது, விதிமீறல். இந்த நிலைமை தமிழகத்தில் மட்டுமின்றி, அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. பயணியர் தேவையை அரசு பஸ்களால் பூர்த்தி செய்ய முடியாது என்பதால், விதிமீறல் என்று தெரிந்தும், ஆம்னி பஸ்களை இயக்க அரசு அனுமதிக்கிறது. பயணியரை ஏற்றிச் செல்வது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது என அனைத்தும் அரசுக்கு தெரிந்தே சட்ட விரோதமாக நடக்கின்றன.
ஆனால், எதுவும் தெரியாதது போல, ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால்ல கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிப்பதும், விதிமீறல்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து ஆணையரகம் சிறப்பு குழுக்களை அமைப்பதும், யாரை ஏமாற்ற என்று தெரியவில்லை.
ஆம்னி பஸ் நிறுவனங்கள், இணையதளங்களில் வெளிப்படையாக கூடுதலாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை அறிவிக்கின்றன. அதன் மீது நடவடிக்கை எடுக்காத அரசு, கூடுதல் கட்டணம் குறித்து பயணியர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்வது கேலிக்குரியதாக உள்ளது.
ஆம்னி பஸ்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயிக்காத நிலையில், கூடுதல் கட்டணம் என்று, எதன் அடிப்படையில் முடிவுக்கு வருகிறது என்பதும் புரியாத புதிராக உள்ளது. ஒவ்வொரு முறையும் ஆம்னி பஸ்களில் சோதனை நடத்தி, 100 முதல், 200 ஆம்னி பஸ்களின் பர்மிட்களை 'சஸ்பெண்ட்' செய்து, போக்குவரத்து ஆணையரகம் நடவடிக்கை எடுக்கிறது. ஆனால், சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து, அவர்களின் பஸ்களை விடுவித்து விடுகின்றனர்.
ஏமாற்றம்
விதிமீறல் மீதான நடவடிக்கை என்ற பெயரில் சிலர் கல்லா கட்டுகின்றனரே அன்றி, மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை. ஆம்னி பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளதால், பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளது.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன், 800 ஆக இருந்த ஆம்னி பஸ்கள் எண்ணிக்கை தற்போது 3,000 ஆக அதிகரித்துள்ளது.
தினமும் ஏராளமானோர் ஆம்னி பஸ்களில் பயணிக்கும் நிலையில், ஆம்னி பஸ்களுக்கு முறையாக பர்மிட் கொடுத்து, முறையாக கட்டணத்தை அரசு நிர்ணயித்தால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும். அதை விடுத்து குழு அமைப்பது, அனைவரையும் ஏமாற்றும் செயலாகவே அமையும்.
- நமது நிருபர் -