தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பஸ் போக்குவரத்து நிறுத்தம்
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பஸ் போக்குவரத்து நிறுத்தம்
ADDED : நவ 08, 2025 03:00 AM
சென்னை: கேரள மாநில அதிகாரிகள், 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்ததால், தமிழகத்தில் இருந்து அம்மாநிலத்திற்கு, ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது, நேற்று மாலையிலிருந்து நிறுத்தப்பட்டது.
சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து, கேரளாவுக்கு, தினமும், 200க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. சபரிமலை சீசன் துவங்க உள்ளதால், கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து நேற்று மாலை, 6:00 மணியளவில், கேரளா சென்ற ஆம்னி பஸ்களுக்கு, அம்மாநில போக்குவரத்து அதிகாரிகள், 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள், நேற்று மாலை முத ல் கேரளாவுக்கு பஸ்கள் இயக்குவதை நிறுத்தினர்.
இது குறித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கூறியதாவது:
சாலை வரி உள்ளிட்ட காரணங்களை தெரிவித்து, கேரள மாநில போக்குவரத்து அதிகாரிகள், எங்களிடம் அபராதம் வசூலிக்கின்றனர்.
இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்தி, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அது வரை, கேரள மாநிலத்திற்கு, ஆம்னி பஸ்களை இயக்குவது இல்லை என, முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

