
நவம்பர் 25, 1964
கர்நாடக மாநிலம் பெங்களூரில், 1893, நவம்பர் 8ல் பிறந்தவர் துவாரம் வேங்கடசாமி நாயுடு.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வளர்ந்த இவரின் அண்ணன் வெங்கடகிருஷ்ணய்யா, வயலின் வித்வான். இவரின் பார்வை குறைபாட்டை சக மாணவர்கள் கேலி செய்ததால், பள்ளிக்கு செல்லவில்லை. அண்ணனிடம் நேரடியாகவும், வீணை சேஷண்ணா, சங்கமேஸ்வர சாஸ்திரி, கோனேரிராஜபுரம் வைத்தியநாத அய்யர் உள்ளிட்டோரின் கச்சேரிகளை கேட்டு, தீவிர பயிற்சி செய்தார். விஜயநகரம் மகாராஜா இசைக் கல்லுாரியில் சேரச் சென்ற இவரின் வாசிப்பைக் கேட்ட கல்லுாரி நிர்வாகம், இவரை பேராசிரியராக்கியது. சென்னை காங்கிரஸ் மாநாட்டில் வாசித்ததால் பிரபலமானார்.
காஞ்சிபுரம் நாயனாப் பிள்ளை, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், பல்லடம் சஞ்சீவிராவ், முசிறி சுப்பிரமணிய அய்யர் ஆகியோருக்கு பக்கவாத்தியம் வாசித்தார். வானொலி இசைக்கலைஞராக, இசைத்தட்டுகளின் வாயிலாக புகழ் பெற்றார். முதலில் தனி வயலின் கச்சேரியை, வேலுாரில் அறிமுகம் செய்தார். தனித்த இசை பாணியை கடைபிடித்ததுடன், இசை நுணுக்கங்களை கட்டுரைகளாகவும் எழுதினார். 'சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற இவர், தன், 71வது வயதில்,1964ல், இதே நாளில் மறைந்தார்.
இசைக்கலைஞரின் நினைவு தினம் இன்று!