
டிசம்பர் 9, 1946
இத்தாலி நாட்டின், வெனிடோ மாகாணத்தின் லுாசியானா எனும் ஊரில், ஸ்டெபனோ - பாவ்லோ மைனோ தம்பதியின் மகளாக, 1946ல், இதே நாளில் பிறந்தவர் சோனியா.
இவர், அங்குள்ள கத்தோலிக்க பள்ளி, பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள, பெல் கல்வி அறக்கட்டளை பள்ளியில் படித்தார். அப்போது, அங்கிருந்த கிரேக்க உணவகத்தில் பகுதி நேரமாக பணியாற்றினார். கேம்பிரிட்ஜ் பல்கலையின், டிரினிட்டி கல்லுாரியில் சேர பதிவு செய்திருந்த ராஜிவை, அந்த உணவகத்தில், 1965ல் சந்தித்தார்.
இருவரும் காதலித்து, 1968ல், ஹிந்து முறைப்படி திருமணம் செய்தனர். தன் தம்பி, தாயின் மரணத்துக்கு பின், ராஜிவ் நம் நாட்டின் பிரதமரானார். அவரும் படுகொலை செய்யப்பட்டதால், அரசியலில் களமிறங்கிய சோனியா, காங்கிரசின் தலைவரானார்.
கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியில், பா.ஜ.,வின் சுஷ்மா ஸ்வராஜை தோற்கடித்து, எம்.பி.,யானார். நரசிம்மராவ், மன்மோகன் சிங்கை பிரதமர்களாக்கினார். உ.பி.,யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி தலைவர், கூட்டணி கட்சி தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார்.
மாமியார் இந்திராவை பின்பற்றி, தமிழகத்தின் பாரம்பரிய உடையான சேலையில் வலம் வரும் எளிய தலைவியின், 79வது பிறந்த தினம் இன்று!