
டிசம்பர் 23, 1952
துாத்துக்குடி மாவட்டம், நாசரேத் எனும் ஊரில், தமிழறிஞர் சாமுவேலின் மகனாக, 1877 மே 25ல், பிறந்தவர் தர்மராசு சற்குணர்.
இவர், சென்னை கிறிஸ்துவ கல்லுாரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளையும் கற்றறிந்தார். பட்டப்படிப்பை முடித்து, ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். தமிழ் மீது இருந்த ஆர்வத்தால், தான் படித்த கல்லுாரியிலேயே தமிழாசிரியராக பணியில் சேர்ந்தார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களை பன்மொழி புலமையுடன் கற்பித்து, தம் மாணவர்கள் பலரை தமிழாய்வாளர்களாக ஆக்கினார். சென்னையில், 'தென்னிந்திய தமிழ் கல்விச் சங்கம்' என்ற அமைப்பை நிறுவினார்.
அதில், அ.கி.பரந்தாமனாரை செயலராக்கி, தான் தலைவராகி, தமிழ் வித்வான்களை உருவாக்க, அதற்கான தேர்வுக்கு பயிற்சி அளித்தார். எழுத்தாளர்கள், தங்களின் புலமையை வெளிப்படுத்தும் வகையில் எழுதியதை கண்டித்தார். 'நல்ல கருத்துக்களை எளிய தமிழில் எழுதினால் தான், எளியவர்களை அடையும்; அதுவே, நல்ல எழுத்து' என்றார். சென்னை பல்கலை தமிழ் குழு உறுப்பினர், பாடத்திட்டக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்த இவர், தன், 75வது வயதில், 1952ல் இதே நாளில் மறைந்தார்.
தமிழ் பண்டிதர், உ.வே.சாமிநாத அய்யரால், 'நற்குணம் வாய்ந்த சற்குணர்' என, புகழப்பட்டவரின் நினைவு தினம் இன்று!

