
  டிசம்பர், 28 1932
குஜராத் மாநிலம், ஜூனாகத் மாவட்டம், சோர்வாடில், ஹிராசந்த் கோர்தன்பாய் அம்பானி -- மோத்வானியா தம்பதியின் மகனாக, 1932ல் இதே நாளில் பிறந்தவர் திருபாய் அம்பானி.
இவர், பகதுார் காஞ்சி பள்ளியில் படித்தார். ஆசிரியரான தந்தையின் வருவாய் போதாததால், ஏமன் நாடு சென்று வேலை பார்த்தார். பின் நாடு திரும்பி, பெட்ரோல் பங்கில் பணியாற்றினார். தொடர்ந்து, ஜவுளி வணிகத்தில் ஈடுபட்டார். ஏமன் நண்பர் சம்பக்லால் தமனியுடன் இணைந்து, மும்பையில், 'மஜின்' என்ற நிறுவனத்தை துவக்கி, பாலியஸ்டர் நுாலை இறக்குமதி செய்து, மசாலா பொருட்களை ஏற்றுமதி செய்தார்.
'ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன்' நிறுவனத்தை துவக்கி, பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டார். ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தை துவக்கி, சில்லரை முதலீட்டாளர்களை ஈர்த்தார். ஒவ்வொரு ஆண்டும் கூட்டம் நடத்தி, லட்சக்கணக்கான தன் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடினார்.
ரிலையன்சை உலக கார்ப்பரேட் நிறுவனமாக வளர்த்து வியாபித்தார். 'பெரிதாக, வித்தியாசமாக, விரைவாக, முற்போக்காக, சிறந்ததை நோக்கமாக கொள்ளுங்கள்' என்பதை சொன்னதோடு, அதை செய்தும் காட்டிய இவர், 2002, ஜூலை 6ல் தன் 69வது வயதில் மறைந்தார்.
ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியவரின் பிறந்த தினம் இன்று!

