
பிப்ரவரி 17, 1956
திருநெல்வேலி மாவட்டம், சிக்கநரசய்யன் கிராமத்தில், சரவணப்பெருமாள் பிள்ளை -- பாப்பம்மாள் தம்பதிக்கு மகனாக, 1891, அக்டோபர் 12ல் பிறந்தவர் வையாபுரி.
இவர், பாளையங்கோட்டை புனித சவேரியார் பள்ளி, திருநெல்வேலி ஹிந்து கல்லுாரி, சென்னை கிறிஸ்துவ கல்லுாரி களில் தமிழ் மொழியையும், திருவனந்தபுரம் சட்ட கல்லுாரியில் சட்டத்தையும் படித்து, வழக்கறிஞர் ஆனார். ஓலைச் சுவடிகளில் இருந்த பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து, கால நிர்ணயம் செய்து, உரையுடன் பதிப்பித்தார். சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கிய, தமிழ் அகராதியின் பதிப்பாசிரியராக பணியாற்றினார்.
திருவிதாங்கூர் பல்கலையில் பணியாற்றியபோது, மலையாள சொற்களஞ்சியத்தை பதிப்பித்தார். 1936ல், சென்னை பல்கலையின் தமிழாய்வு துறை தலைவராகி, ஆய்வாளர்களை உருவாக்கினார்; தமிழ் ஆராய்ச்சிக்கான இலக்கணத்தை வகுத்தார். சமஸ்கிருதம், மலையாளம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் புலமை பெற்ற இவர், மொழி ஒப்பீட்டாய்வு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 'ரசிகமணி' டி.கே.சி.,யுடன் சேர்ந்து, நெல்லை கம்பன் கழகத்தை உருவாக்கினார். தன், 65வது வயதில், 1956ல் இதே நாளில் மறைந்தார்.
'தமிழ் தாத்தா' உ.வே.சாமிநாத அய்யருக்கு பின், ஓலைச்சுவடிகளை தேடி, பதிப்பித்த தமிழறிஞர் மறைந்த தினம் இன்று!

