
ஜனவரி 2, 1938
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம், வெள்ளமுத்து கவுண்டன் வலசு எனும் கிராமத்தில், சென்னியப்பன் - நல்லம்மாள் தம்பதிக்கு மகனாக 1938ல், இதே நாளில் பிறந்தவர் ராசு.
திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லுாரி யில் வித்வான் படிப்பையும், சென்னை பல்கலையில், பி.லிட்., முதுகலை படிப்புகளையும் முடித்தார்.
ஈரோடில் தமிழாசிரியராக பணியில் சேர்ந்த இவர், தமிழக தொல்லியல் துறை, தஞ்சை பல்கலைகளில் பணியாற்றினார். கொங்கு நாடு தொடர்பாக பல்வேறு ஆய்வு நுால்களை பதிப்பித்தார். அவற்றில், கொங்கு மண்டல கோவில்கள், வேளாளர் குலங்கள் பற்றிய அரிய தகவல்களை வெளிப்படுத்தினார்.
இவர், 250க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரை களை கருத்தரங்கங்களில் சமர்ப்பித்துள்ளார். இவர் எழுதிய, 'தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்' எனும் நுால், 'தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நுால்' என்ற பரிசை பெற்றது.
தமிழக அரசின் உ.வே.சா., விருதை பெற்ற இவர், 2023, ஆகஸ்ட் 9ல், தன், 85வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!

