
ஜனவரி 6, 1910
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள கூடலுாரில், ஜி.நாராயணசாமி அய்யர் - விசாலம் தம்பதிக்கு மகனாக, 1910ல் இதே நாளில் பிறந்தவர், ஜி.என்.பாலசுப்பிரமணியன்.
இவரது தந்தை, சென்னை, திருவல்லிக்கேணி, இந்து உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தபடி, சங்கீத சபாவும் நடத்தினார்.
பாலசுப்பிரமணியன், மதுரை சுப்பிரமணிய அய்யரிடம் இசை கற்றார். பி.ஏ., ஆங்கிலம், டிப்ளமா இசை முடித்து, புதிய கீர்த்தனைகளை எழுதி, பாடினார். சென்னை மியூசிக் அகாடமியில், தன் முதல் கச்சேரியை அரங்கேற்றினார்.
எம்.எல்.வசந்தகுமாரி, ராதா - ஜெயலட்சுமி, எஸ்.கல்யாணராமன் உள்ளிட்ட சிஷ்யர்களை உருவாக்கினார். சென்னை வானொலியின் இசைப்பிரிவில் இணை இயக்குனராக இருந்தார்.
சகுந்தலை, பாமா விஜயம், சதி அனுசுயா, ருக்மாங்கதன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளில், 250க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றிய இவர், 1965, மே 1ல், தன், 55வது வயதில் மறைந்தார்.
'சங்கீத கலாநிதி விருது' பெற்ற ஜி.என்.பி., பிறந்த தினம் இன்று!