
ஜனவரி 8, 1847
இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மட்டுவில், கணபதிப்பிள்ளை உடையார் - உமா மகேஷ்வரி தம்பதியின் மகனாக, 1847ல், இதே நாளில் பிறந்தவர், ம.க.வேற்பிள்ளை.
இவர் சிறுவயதிலேயே தாய்வழி உறவினரான சண்முகம் சட்டம்பியாரிடம் கல்வி கற்றார். தொடர்ந்து, நல்லுார் கார்த்திகேய ஆசிரியரிடமும், ஆறுமுக நாவலரிடமும் மரபுவழி கல்வியை பெற்றார். யாழ்ப்பாணத்தில் கல்வி நிலையம் நடத்தி வந்த இவர், சென்னை வந்து, 'வித்துவசிரோமணி' பொன்னம்பலம் பிள்ளையிடம் கல்வி கற்றார். சென்னை மற்றும் சிதம்பரத்தில் செயல்பட்ட நாவலர் பாடசாலை யில் ஆசிரியராக பணியாற்றினார்.
இவர், 'ஈழ மண்டல சதகம், புலோலி வயிரவக் கடவுள் தோத்திரம், புலோலி பர்வதபத்தினியம்மை தோத்திரம், ஆருயிர் கண்மணிமாலை என்னும் செய்யுள்' உள்ளிட்ட இலக்கியங்களை இயற்றினார். ஒரே பொருள் பற்றி, நுாறு செய்யுள்களில் பாடும் முறையில் அமைந்த, ஈழ மண்டல சதகத்தை, தமிழகத்தில் உள்ள சிதம்பரத்தில் அரங்கேற்றி, 'பிள்ளைப் புலவர்' எனும் பட்டம் பெற்றார்.
'திருவாதவூரடிகள் புராணம், புலியூரந்தாதி, அபிராமி அந்தாதி, கெவுளி நுால்' உள்ளிட்ட நுால்களுக்கு உரை எழுதினார். 'வேதாரணிய புராணம், சிவகாமியம்மை சதகம்' உள்ளிட்ட நுால்களை பதிப்பித்தார். இவர் தன், 82வது வயதில், 1930, பிப்ரவரி, 17ல் மறைந்தார்.
'உரையாசிரியர்' எனப் புகழப்பட்ட, 'தமிழறிஞர், ம.க.வே' பிறந்த தினம் இன்று!