UPDATED : ஜன 24, 2024 11:48 PM
ADDED : ஜன 24, 2024 10:09 PM

ஜனவரி 25, 1872
மதுரை மாவட்டம், வத்தலகுண்டுவில் விவசாய குடும்பத்தில், 1872ல் இதே நாளில் பிறந்தவர் பி.ஆர்.ராஜமய்யர். இவர், மதுரை பாண்டித்ய பாடசாலை, சென்னை கிறிஸ்துவ கல்லுாரிகளில் படித்தார். பின், ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு பல்வேறு தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். தன் 21வது வயதில், 'விவேக சிந்தாமணி' இதழில், இவர் தொடராக எழுதிய, 'கமலாம்பாள் சரித்திரம்' நாவல், தமிழின் இரண்டாவது நாவலாக கருதப்படுகிறது.
பெண்களை பற்றிய, பெண் பெயரில் அமைந்த, தமிழின் முதல் கதை அது. இது, நாவல் எழுதுவதில் புதிய உத்தியை கற்பித்தது. இவரின் ஆங்கில ஆன்மிக கட்டுரைகளை வாசித்த சுவாமி விவேகானந்தர், இவரை, சென்னையில் இருந்து வெளியான தன், 'பிரபுத்த பாரதா' என்ற ஆங்கில பத்திரிகைக்கு ஆசிரியராக்கினார்.
இவரின் தத்துவ கட்டுரைகள், 'வேதாந்த சஞ்சாரம்' என்ற நுாலாக வெளியானது. குடல் சிக்கல் நோயால் அவதிப்பட்ட இவர், 1898, மே 13ல், தன், 26வது வயதில் மறைந்தார். க.நா.சுப்பிரமணியம், இவரின் கமலாம்பாள் சரித்திரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, உலகறிய செய்தார்.
தமிழின் முன்னோடி எழுத்தாளர் பிறந்த தினம் இன்று!