
பிப்ரவரி 5, 2023
துாத்துக்குடியில், 1955ல் பிறந்த, டி.பி.கஜேந்திரன், சென்னை மாநிலக் கல்லுாரியில் படித்தார். இயக்குனர் பாலச்சந்தரிடம் உதவியாளராக சேர்ந்தார். அங்கு, கதை, வசனம் எழுதிய விசுவுடன் நன்கு பழகினார். விசு, திரைப்படங்களை இயக்கத் துவங்கியதும் அவரிடம் உதவியாளராக சேர்ந்தார். சிதம்பர ரகசியம் படத்தில் நடிகராக அறிமுகமானார்.
தன் குருநாதரைப் போலவே, குறைந்த பட்ஜெட் படங்களை இயக்கி, வெற்றி பெற திட்டமிட்ட இவர், வீடு மனைவி மக்கள் திரைப்படத்தின் வாயிலாக இயக்குனரானார். ராமராஜன் நடித்த, எங்க ஊரு காவக்காரன், எங்க ஊரு மாப்பிள்ளை, கார்த்திக் நடித்த பாண்டி நாட்டுத் தங்கம், பிரபு நடித்த நல்ல காலம் பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம் உள்ளிட்ட குடும்ப பாங்கான படங்களை இயக்கினார்.
பாரதி, பம்மல் கே.சம்பந்தம், பேரழகன், மன்மதன், குசேலன், வில்லு உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இவர் தன், 68வது வயதில், 2023ல் இதே நாளில் மறைந்தார்.
முதல்வர் ஸ்டாலினின் கல்லுாரி தோழர்களில் ஒருவரான, கஜேந்திரன் மறைந்த தினம் இன்று!

