
பிப்ரவரி 9, 1919
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் சச்சிதானந்தம் பிள்ளை - கமலாம்பாள் தம்பதிக்கு 10வது குழந்தையாக, 1919ல் இதே நாளில் பிறந்தவர் சோமசுந்தரம் எனும் சோமு.
இவரது தந்தைக்கு, மதுரை நீதிமன்றத்தில் வேலை கிடைத்ததால், அங்கு குடியேறினர். இசைக் குடும்ப பாரம்பரியத்தில் வந்ததால், சென்னை வந்து, சித்துார் சுப்பிரமண்ய பிள்ளையிடம், 14 ஆண்டுகள் கர்நாடக சங்கீதத்தையும், மிருதங்கம், கஞ்சிரா வாசிப்பையும் கற்றார். 1934ல், திருச்செந்துாரில் தன் முதல் கச்சேரியை செய்தார்.
தொடர்ந்து, ஏழு மணி நேரம் வரை கச்சேரி செய்வதில் வல்லவரான இவர், வள்ளலாரின் அருட்பா, சீர்காழி மூவரின் பாடல்கள், ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் பாடல்கள், பாரதியார் பாடல்கள், திருப்புகழ் உள்ளிட்ட தமிழ் பாடல்களையும் பாடினார்.
இவருக்கு, தமிழ் இசை சங்கத்தின் 'இசைப் பேரறிஞர்' பட்டம், மத்திய அரசின், 'பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருது வழங்கப்பட்டன. தன், 70வது வயதில், 1989 டிசம்பர் 9ல் மறைந்தார்.
தெய்வம் படத்தில், 'மருதமலை மாமணியே முருகையா' என்ற கணீர் குரலால், முருக பக்தர்களை மயக்கிய, மதுரை சோமு பிறந்த தினம் இன்று!

