
பிப்ரவரி 11, 1946
சென்னை, அயோத்தி குப்பத்தில், 1860, பிப்ரவரி 18ல், மீனவர் குடும்பத்தில் பிறந்தவர் சிங்காரவேலர். இவர், சென்னை மாநிலக் கல்லுாரி, சட்டக் கல்லுாரியில் படித்தார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உருது, ஜெர்மன் மொழிகளை அறிந்தவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
கடந்த, 1921ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை இணைத்து, வழக்கறிஞர் தொழிலை துறந்தார். தமிழறிஞரும், பின்னி, கர்னாடிக் ஆலை தொழிலாளர்களுக்கான தொழிலாளர் சங்கத்தை துவக்கியவருமான திரு.வி.க.,வின் நண்பர். அவரின் சங்கத்திற்கான சட்ட உதவிகளை செய்தவர்.
இந்திய பொதுவுடைமை கட்சியை துவக்கியவர், ஈ.வெ.ரா., வெளிநாடு சென்ற போது, 'குடியரசு' இதழை நடத்தினார்.
நாட்டின் முதல் தொழிற்சங்கத்தை துவக்கியவர்.சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்தார். அப்போது, மதிய உணவு திட்டத்தை அமல்படுத்திய இவர், 1946ல், தன் 86வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
சென்னை கலெக்டர் அலுவலகம், மீனவர் வீட்டுவசதி திட்டம் ஆகியவற்றின் பெயரில் இன்றும் நிலைத்திருக்கும், தொழிலாளர் தலைவர் மறைந்த தினம் இன்று!

