
பிப்ரவரி 22, 1898
மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியை பூர்வீகமாகக் கொண்ட நெசவுத் தொழிலாளி முனுசாமி - மங்களம் தம்பதிக்கு மகளாக, தென் ஆப்ரிக்காவில், 1898ம் ஆண்டு இதே நாளில் பிறந்தவர் வள்ளியம்மை.
ஜோகன்னஸ்பர்க்கில், வியாபாரம் செய்த இவரின் தந்தை உள்ளிட்ட இந்தியர்களை அங்கிருந்த பிரிட்டிஷ் அரசு கொடுமைப்படுத்தியதுடன், அடிப்படை உரிமைகளையும் பறித்து, அதிக வரி விதித்தது. அங்கு வழக்கறிஞராக பணியாற்றிய மகாத்மா காந்தி இவற்றை எதிர்த்து, அறவழி போராட்டங்களில் ஈடுபட்டார். அவருடன், 15 வயதான வள்ளியம்மையும் இணைந்தார். ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து நியூகேசில் வரை எதிர்ப்பு பேரணி நடந்தது; அதில் பங்கேற்றதால், 1913, டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இவரது உடல் நலிவுற்றதால், பிரிட்டிஷ் அரசு விடுதலை செய்தது. விடுதலையை மறுத்து இந்தியர்களுக்கான தலை வரியை நீக்கியபின், பிப்ரவரி 11ல் விடுதலை அடைந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டு, 1914ல் தன், 16வது பிறந்த நாளில் இதே நாளில் மறைந்தார்.
இவரது நுாற்றாண்டில், ஆப்ரிக்க காந்தியவாதியான நெல்சன் மண்டேலா, இவரது கல்லறையை புதுப்பித்தார். காந்தியை உறுதியான போராளியாக மாற்றிய, தில்லையாடி வள்ளியம்மை பிறந்த மற்றும் இறந்த தினம் இன்று!