
பிப்ரவரி 23, 2015
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு அருகில் உள்ள புழுதிக்குளத்தில், போலீஸ் அதிகாரியாக இருந்த செல்வத்தின் மகனாக, 1939ல் பிறந்தவர் ஆர்.சி.சக்தி.
இவர், சிறுவயதிலேயே நாடக கம்பெனி நடத்தினார். 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற நாடகத்தில் இவர் நடித்த வில்லன் பாத்திரம், ரசிகர்களால் பாராட்டப்பட்டது. நடிக்கும் ஆசையில் சென்னை வந்து, திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றினார்.
நடன இயக்குனர் தங்கத்தின் உதவியாளராக இருந்த கமல்ஹாசனின் நண்பரானார். கமலை கதாநாயகனாக்கி, உணர்ச்சிகள் படத்தில் இயக்குனரானார்.
இவர் இயக்கிய, மனிதரில் இத்தனை நிறங்களா, தர்ம யுத்தம், சிறை உள்ளிட்ட படங்களின் வாயிலாகபுகழடைந்தார். இவர் இயக்கிய, பத்தினிப்பெண் என்ற படம், தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருதை பெற்றதுடன், சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதையும் பெற்றார். பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, தன் 76வது வயதில், 2015ல் இதே நாளில் மறைந்தார்.
இயக்குனர் ஆர்.சி.சக்தியின் நினைவு தினம் இன்று!